Including 4 Tamilnadu temple idols in 29 returned from Australia: தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் திருடப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட 29 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றில் 4 சிலைகள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. தமிழகத்தைச் சேர்ந்த 4 சிலைகள் தமிழகத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சிலைகளில், சைவத் துறவி திருஞானசம்பந்தரின் நின்ற நிலையில் உள்ள வெண்கலச் சிலை, நடனமாடும் நிலையில் உள்ள திருஞானசம்பந்தரின் வெண்கலச் சிலை, சந்தேஸ்வர நாயன்மாரின் வெண்கலச் சிலை மற்றும் சிவபெருமான் சிலை ஆகியவை தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
இதில், நின்ற நிலையில் உள்ள திருஞானசம்பந்தர் சிலை மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருசைக்காடு ஸ்ரீ சயவனேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமானது. இந்த சிலை கி.பி 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. அதாவது சோழர் கால சிலையாகும். வில்லியம் வுல்ஃப் என்ற 'சிலை கடத்தல்காரர்' 1965 இல் இந்த சிலையைத் திருடி ஆஸ்திரேலியாவிற்கு கடத்தியதாகக் கூறப்படுகிறது.
திருஞானசம்பந்தர் நாயன்மார்கள் என்று அழைக்கப்படும் 63 சைவ துறவிகளில் ஒருவர். முதல் 3 சைவத்திருமுறைகளை இயற்றியவர். இவரது சைவத்திருமுறைகள் ‘தேவாரம்’ பாடல்களில் முதல் 3 பதிகங்களாக உள்ளது. இவர் கி.பி.6ஆம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்தவர். திருஞானசம்பந்தரின் மற்றுமொரு சிலையின் தோற்றம் குறித்தும் சிலைப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. சந்தேஸ்வர நாயனார் மற்றும் சிவன் சிலைகளின் தோற்றம் இப்போது அறியப்படவில்லை. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையுடன் சரிபார்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்: லஞ்ச பணத்துடன் சிக்கிய அதிகாரியை கைது செய்யாமல் டிரான்ஸ்ஃபர் செய்வதா? அன்புமணி கேள்வி
முன்னதாக, திருடப்பட்ட மற்றும் கடத்தப்பட்ட 29 கலைப்பொருட்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியது. இந்த சிலைகளை பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை பார்வையிட்டார். பின்னர், திங்களன்று பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கும் இடையிலான காணொலி சந்திப்பின் போது, சிலைகளை திருப்பி அனுப்பியதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.
மற்ற 25 கலைப்பொருட்கள் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கடத்தப்பட்ட மணற்கல், பளிங்கு, வெண்கலம் மற்றும் பித்தளை ஆகியவற்றால் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் ஓவியங்கள் ஆகியவை அடங்கும். இவை ஆஸ்திரேலியாவின் பார்க்ஸ் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தன. இந்தியாவின் கோரிக்கையை அடுத்து அவர்கள் இந்தியாவுக்கு சிலைகளை திருப்பி அனுப்பினர்.
தமிழக காவல்துறை சிலைப் பிரிவு சிஐடியைச் சேர்ந்த ஏடிஜிபி கே.ஜெயந்த் முரளி கூறுகையில், “சிலைகள் மீட்கப்பட்டதில் மாநில அரசும், சிலைப் பிரிவும் முக்கியப் பங்காற்றியுள்ளன. சிலைகளை மாநில அரசுகளிடம் ஒப்படைப்பது குறித்து மத்திய அரசிடம் இருந்து எங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. சிலைகளைப் பெற்றவுடன், அவற்றை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்து, அவற்றை உரிய கோவில்களில் மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.