தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித் துறையினரால் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் கே.பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் 12 பேருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி ஆகியோரின் வீடுகளில் டிசம்பர், 2017ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொழிலதிபதி சேகர் ரெட்டி பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரராக பணிகளை செய்துவந்தார்.
தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, சென்னை, வேலூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. பிரதமர் மோடி பண மதிப்பிழப்பு செய்து அறிவித்த சில வாரங்களில், இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.147 கோடி பணத்தில் ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சட்ட விரோதமாகப் பதுக்கியதாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், சேகர் ரெட்டி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இயக்குனரகம் வழக்குப் பதிவு செய்தன.
இதனைத் தொடர்ந்து, தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது சிபிஐ பதிவு செய்த 3 வழக்குகளும் ஆதாரங்கள் இல்லை என முடித்து வைக்கப்பட்டன. ஆனால், சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, ஒரு டைரி கைப்பற்றப்பட்டது. அந்த டைரியில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், வைத்திலிங்கம், தங்கமணி, செல்லூர் ராஜூ, எம்.சி.சம்பத் உட்பட 12 பேரின் பெயர்கள் இருப்பதாவும் கூறப்படுகிறது. அந்த டைரியில், ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவரங்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் உள்ள பெயர்களை ஆதாரமாக வைத்து முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உட்பட முன்னாள் அமைச்சர்கள் 12 பேருக்கும் வருமான வரித்துறை விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
அதில், அதிமுகவில் இருந்து வெளியேறி தற்போது திமுக அரசில் அமைச்சராக பதவி வகிக்கும் செந்தில்பாலாஜிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
அந்த சம்மனில், சேகர் ரெட்டியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரியில் இவர்களுடைய பெயர்கள் இருப்பது குறித்து விளக்கம் கேட்டு, சம்மன் அனுப்பப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேகர் ரெட்டியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதால், அந்த வழக்குகள் முடிந்துபோனதாக கருதப்பட்ட நிலையில், டைரியில் முன்னாள் முதல்வர்கள் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் மற்றும் முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள் இருந்தது தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.