சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைச் சென்றுள்ள சசிகலாவிடம் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையினர் விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார். இவர், சிறையில் இருந்த போதும், இவரைக் குறித்த சர்ச்சைகள் மற்றும் செய்திகளுக்கு பஞ்சமில்லை. சிறையில் இருந்துக் கொண்டே வெளியில் ஷாப்பிங் சென்று வருவதற்கான வீடியோ பதிவுகள், சிறையில் சசிகலாவிற்கு சொகுசு அறை ஒதுங்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் சசிகலாவின் குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகள், ஜெயா டிவி அலுவலகம், நண்பர்களின் அலுவலங்கள் என அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் திடீரென்று சோதனை நடத்தினர்.
தொடர்ந்து 1 வார காலமாக நீடித்த இந்த சோதனையில், கோடிக்கணக்கான பணங்கள், முக்கிய ஆவணங்கள், நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. ஜெயா டிவிக்கு சொந்தமான பழைய அலுவலங்களும் சீல் வைக்கப்பட்டன. அதன் பின்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில், சசிகலா இருந்த இரண்டு அறைகளில் வருமான வரித்துறையினர், நடத்திய திடீர் சோதனையில் மடிக்கணினி உட்பட்ட முக்கியமான 6 பென் ட்ரைவர்கள் கைப்பற்றப்பட்டன.
போலி நிறுவனங்கள் மூலம் பணம் சேர்த்தல், சட்ட விரோத பணப்பரிமாற்றம், வரி ஏய்ப்பு போன்ற புகாரின் பேரில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சிறையில் உள்ள சசிகலாவிடமும் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சிறையில் நடத்தப்படும் இந்த விசாரணையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பணங்கள் குறித்து சசிகலாவிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, இதற்கான முறையான அனுமதியை பெறுவதற்காக, வருமான வரித்துறையினர் கர்நாடக சிறைத்துறைக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளனர். சிறை நிர்வாகத்திடம் இருந்து அனுமதி கிடைத்துடன் சசிகாலவிடம் வருமான வரித்துறையினர் நேரடி விசாரணையில் இறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.