கோவையில் பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய 4 இடங்களில் இன்று கேரளாவில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாப்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படை நிறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகிலேயே மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் என்ற கார்ப்பரேட் அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.
இது தவிர கவுண்டர்மில் பகுதியில் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. காந்திபுரம் பகுதியிலும் மார்ட்டின் குழுமத்திற்கு சொந்தமான அலுவலம் செயல்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று காலை 8 முதல் இந்த 4 இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 20 க்கும் மேற்பட்டோர் 4 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா பதிவு எண் கொண்ட வாகனங்களில் வந்த வருமானவரித் துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து, மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாகவே வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனையானது தற்போது நடைபெற்று வருகின்றது. மேலும் மார்ட்டின் தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
பி.ரஹ்மான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“