தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, கோவை, விருதுநகர், அருப்புக்கோட்டை ஆகிய இடங்களில் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செயல்படும் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தனியார் கட்டுமான நிறுவனமான CMK Projects Pvt Ltd நிறுவனத்திலும், அந்நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை எழும்பூர், செனாய் நகர், அமைந்தகரை உள்ளிட்ட 10 இடங்களிலும் ரியல் எஸ்டேட் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிறுவனம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை ஒப்பந்தம் எடுத்து கட்டி கொடுத்துள்ளது. மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை கட்டியது இந்த நிறுவனம் தான். இந்த நிறுவனம் ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் ஈரோடு அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், கோவையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. கோவை எலன் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் விக்னேஷ் என்பவரது இல்லத்திலும், கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள கிரீன் பீல்டு ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. கருமத்தம்பட்டி மற்றும் கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும், இதேபோல் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“