திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமாக கரூரில் உள்ள அவரது வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், வருமானவரித் துறையினர் அரசியல் கட்சி தலைவர்களின் வீடு, அவர்களின் உறவினர் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் திருவண்ணாமலையில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான வீடு அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.3.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, அதிமுக அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினர் இளங்கோவனின் வீடு மற்றும் நிறுவனங்களில் வருமானவரித் துறையினர் அதிரட்சி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.6 கோடி கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் இன்று காலை வருமானவரித்துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நீலாங்கரையில் உள்ள சபரீசனின் வீடு உள்பட மொத்தம் 8 இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவகின்றனர்.
இதனிடையே, திமுக கரூர் மாவட்ட செயலாளரும் கரூர் தொகுதி திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜியின் கரூர் வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில், பணம், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டதாக அதிர்காரப்பூர்வமான தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
தமிழசட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக வேட்பாளர்கள் மற்றும் மு.க.ஸ்டாலின் மருமகன் வீடுகளில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமானவரித் துறை சோதனை நடத்துவதாக திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி அண்ணாதுரை வீட்டிலும் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அண்ணாதுரை வீட்டில் சில மணி நேரங்கள் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்துவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை – சபரீசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை தொடர்பாக, திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக அரசின் உந்துதலால் எவ்வித முகாந்திரமும் இல்லாமல், தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக திமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“