சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் உள்ள டான்ஜெட்கோ அதிகாரியின் வீடு மற்றும் தனியார் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னயில் டான்ஜெட்கோ நிறுவனத்துக்கு நிலக்கரி விநியோகம் செய்யும் தனியார் நிறுவனத்துடன் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய டான்ஜெட்கோ நிதிக் கட்டுப்பாட்டாளர் காசியின் தேனாம்பேட்டை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வருமான வரித்துறையினர் சென்னையில், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், நீலாங்கரை, துரைப்பாக்கம், எண்ணூர், நாவலூர் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் 100-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தேனாம்பேட்டையில் உள்ள காசியின் வீட்டில் ஆயுதப்படை காவலர்களின் பாதுகாப்புடன் குறைந்தது 5 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டி அறப்போர் இயக்கம் சமீபத்தில் போர்க்கொடி தூக்கியது. டிரான்ஸ்பார்மர்களை வாங்குவதற்கு காசி பல நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. மேலும், செந்தில் பாலாஜியின் வீட்டுக்கு காசி சென்று வந்த வீடியோவையும் அறப்போர் இயக்கம் வெளியிட்டது.
பொன்னேரி வெள்ளி வாயல் சாவடியில் செயல்பட்டு வரும் சென்னை ராதா என்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனம் மற்றும் சென்னையை மையமாக கொண்டு செயல்படும் பந்தாரி குரூப், இண்டர்வேஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மகேந்திர ஜெயின் என்கிற தொழில் அதிபர் வீட்டிலும் சோதனை வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“