மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமான அவரது கட்சிப் பொருளாளர் ஏ.சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 8 கோடி ரூபாய் கைப்பற்றியுள்ளனர். அதோடு, சந்திரசேகரின் மதுரை, திருப்பூர் அலுவலகங்களிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளர் தொழிலதிபர் சந்திரசேகர். இவர் மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பை மற்றும் கொரோனா கவச ஆடைகள், முக கவசங்களை தயாரித்து வழங்கும் தமிழ்க அரசின் ஒப்பந்தத்தைப் பெற்று வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மநீம பொருளாளர் சந்திரசேகரின் வீடு மற்றும் அலுவலகங்கள் மற்றும் மதுரையில் உள்ள அலுவலகத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நேற்று (மார்ச் 17) திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில், 8 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தை வருமானவரித் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மேலும், சந்திரசேகரின் சகோதரரும் மதிமுக திருப்பூர் மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜனுக்கு சொந்தமான திருப்பூர் மாவட்டம் - தாராபுரம், அலங்கியம் சாலையில் உள்ள வீட்டிலும் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதனைத் தொடந்து, சந்திரசேகரின் நண்பரும் சென்னியப்பா நகர் பகுதியில் உள்ள திமுக நகர செயலாளர் தனசேகர்வீட்டுக்கு சென்ற வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதே போல, சந்திரசேகருக்கு திருப்பூரில் உள்ள அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்தின் அலுவலகத்திலும், மதுரையில் உள்ள அவரது அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடத்தினர். இந்த சோதனை இரவு 9.30 மணி வரை நடைபெற்றது. வருமானவரித் துறை சோதனை முடிவில் கணக்கில் வராத பணம் 8 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சி பொருளாளரும் தொழிலதிபருமான சந்திரசேகர் வீடு மற்றும் அலுவலகம் அவருடைய உறவினர்கள் வீடுகளில் வருமானவரித் துறை நடத்திய சோதனை நடத்தி 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.