இன்று கான்பெராவில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபராமாக வெற்றி பெற்றது.
தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் முதல் முறையாக இந்த போட்டியில் களமிறக்கப்பட்டார். முதல் சர்வதேச போட்டியிலேயே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இந்திய அணியின் வெற்றியை நடராஜன் உறுதி செய்தார்.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து:
இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
மு. க ஸ்டாலின் வாழ்த்து:
இந்தியா கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்தார்.
தமிழன் என்று சொல்லடா... சிவகார்த்திகேயன்:
சிவகார்த்திகேயன் தனது ட்விட்டரில், "அறிமுகமான போட்டியே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அதுவும் ஆஸ்திரேலியாவில்.... நீல நிற ஜெர்சியில் உங்களைப் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. எங்கள் அனைவருக்கும் பெருமைமிக்க உற்சாகமிக்கதொரு தருணம். தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா" என்று தெரிவித்தார்.
ரவிக்குமார் எம்.பி:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றுத் தனது திறமையான பந்துவீச்சின்மூலம் பாராட்டுகளைப் பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு வாழ்த்துகள்! இந்திய கிரிக்கெட் அணி சாதிக்க வேண்டுமெனில் அது சமூகரீதியில் ஜனநாயகப்பட வேண்டும் என்பதை நடராஜனின் நுழைவு மெய்ப்பித்திருகிறது! என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் தனது ட்விட்டரில் பதிவு செய்தார்.