Advertisment

சீனப் போரின் போது நகைகளை கழற்றிக் கொடுத்த ஜெயலலிதா: நினைவுகூர்ந்த ஓபிஎஸ்

தன்னுடைய நிலத்திற்கும் மக்களுக்கும் வரும் சவால்களை முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Jayalalithaa with OPS

Jayalalithaa with OPS

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் சீன ராணும் அத்துமீறியது. அப்போது இந்திய சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் அடுத்தக்கட்டமாக மேற்கொள்ள வேண்டிய, நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் அதிமுக சார்பில் கலந்துக் கொண்ட ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவை நினைவுக்கூர்ந்தார்.

Advertisment

வீடியோகான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மொத்தம் 20 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்ரே உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்

ஜெயலலிதாவை நினைவுகூர்ந்த துணை முதல்வர் பன்னீ்ர்செல்வம்

நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பிரதமர், பின்னால் அதிமுக உறுதியாக நிற்கிறது, 1962 சீனப்போரில் நாட்டுக்காக தனது நகைகளை கழற்றி கொடுத்த ஜெயலலிதாவை நினைவு கூர்கிறேன் என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பன்னீர்செல்வம் பேசினார்.

முன் எப்போதும் இல்லாத நெருக்கடியாக, கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நமது நாடு ஒருபக்கம் ஈடுபட்டிருக்கும் போது, மறு பக்கம் சீன தரப்பினரின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக நாடு ஒரு புதிய சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளது. நமது நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில், பிரதமர், இந்திய அரசு மற்றும் நமது பாதுகாப்பு படைகளுக்கு பின்னால் தமிழகமும் மற்றும் அதிமுகவும் உறுதியாக நிற்கின்றன.

சமீபத்தில் இறந்த 20 ராணுவ வீரர்களில் ஒருவர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஹவில்தார் கே.பழனி தமிழகத்தைச் சேர்ந்தவர். இந்த மாவட்டம் நம் நாட்டின் தென்முனைக்கு அருகில் உள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான ஒவ்வொரு இந்தியரும் நாட்டைப் பாதுகாப்பார்கள், மிகச்சிறந்த தியாகம் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதையே இவ்வீரரின் மறைவு சரியாக நிரூபிக்கிறது.

அப்போதைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களின் போர் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக, அம்மா, தனது சொந்த நகைகளை தாராளமாக நன்கொடையாக வழங்கியதை, நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் உரை : இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாத்திட வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடுதான் நாம் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறோம்; அதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்த பேரறிஞர் அண்ணா அவர்கள் “வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்” என்றார். எனவே, நமது வீடான இந்தியத் திருநாட்டைப் பாதுகாக்க; நாட்டிற்கே முன்னுரிமை. தன்னுடைய நிலத்திற்கும் மக்களுக்கும் வரும் சவால்களை முறியடிக்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு!

திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொருத்தவரை,

1962 இந்தியா – சீனப் போராக இருந்தாலும்,

1971 இந்தியா - பாகிஸ்தான் போராக இருந்தாலும்,

1999-ல் கார்கில் போராக இருந்தாலும்,

நாட்டின் பக்கமும், நாட்டு மக்கள் மற்றும் அரசாங்கத்தின் பக்கமும்தான் எப்போதும் நின்றிருக்கிறோம்.

பண்டித ஜவகர்லால் நேரு அவர்களாக இருந்தாலும்; அன்னை இந்திரா காந்தி அவர்களாக இருந்தாலும்; அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களாக இருந்தாலும், இந்நாட்டுப் பிரதமர்களின் கரத்தை வலுப்படுத்தியிருக்கிறோம்.

இந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கும் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஆதரிப்பதில் எங்களுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை.

1962 இந்தியா - சீனப் போரின் போது, சீனாவை முதலில் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது திராவிட முன்னேற்றக் கழகம். சில மணி நேரங்களிலேயே நிதி திரட்டி “பாதுகாப்பு நிதி” வழங்கியது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் அனைவரும், எங்கள் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் அன்று கூறியது போல், “Sons of the Soil”, அதாவது ‘இந்த மண்ணின் மைந்தர்கள்’, என்ற உரிமையும் உணர்வும் மிகக் கொண்டவர்கள்!

அனைத்துத் தருணங்களிலும் நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளித்த பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையில் வளர்ந்தது திராவிட முன்னேற்றக் கழகம். இன்று, அத்தகைய தலைவர்களின் வழிநின்று, நாட்டின் நலன் போற்றி; இந்தியா என்னும் எண்ணத்தைப் பாதுகாத்திட உழைத்திடும் இயக்கத்தை வழிநடத்துகிறேன் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

1962 போரின் போது முதல் களப்பலியானவர் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியைச் சேர்ந்த வீரர் செல்வராஜ் என்பதை நினைவு கூர்கிறேன்.

“அந்நிய நாட்டின் ஆக்கிரமிப்பில் இருந்து, இந்தியா தனது சுயமரியாதையையும், ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாக்கும்” என்ற பிரதமர் அவர்களின் கருத்தை நான் வரவேற்கிறேன்.

“இந்தியா அமைதியை விரும்புகிறது. தேவைப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கவும் தயங்காது” என்றும் பிரதமர் அவர்கள் கூறியிருப்பதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வரவேற்கிறேன். எனவே, இத்தருணத்தில் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் பாதுகாக்க, மாண்புமிகு பிரதமர் அவர்கள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியுடன் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். போர்க்குரல் ஒலிக்கும் போது நாம் பின்வாங்க மாட்டோம். ஒரே நாடாக நாம் முன்சென்று, இந்திய நாட்டின் பெருமையை நிலைநாட்டிடுவோம்.என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Narendra Modi O Panneerselvam M K Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment