Tamilnadu News Update : பிரதமர் மோடியின் பாதுகாப்பு மீறல் குறித்து கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால்க்கு பிரபல நடிகர் சித்தார்த் ஆபாச பொருள்படும் வார்த்தையை பயன்படுத்தி கருத்து தெரிவித்த நிகழ்வு தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்திய பிரதமர் மோடி கடந்த 5-ந் தேதி பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதாக இருந்தது. இதற்காக முதலில் ஹலிகாப்டரில் செல்ல திட்டமிட்டிருந்த பிரதமர் மோடி மோசமான வானிலை காரணமாக காரில் சென்றார். அப்போது பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் பகுதியில் ஒரு மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த பிரதமர் மோடியின் கார் திடீரெ நிறுத்தப்பட்டது.
அப்பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் 20 நிமிடங்கள் வரை காத்திருந்த பிரதமர் மோடி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு மீண்டும் டெல்லி திரும்பினார். இந்த நிகழ்வு இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜகவினர் பலரும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து அறிக்கை வெளியிட்டனர்.
அந்த வகையில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கடந்த 5-ந் தேதி பிரதமர் மோடியில் பாதுகாப்பு மீறல் குறித்து ஒரு பதி்வை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், எந்த நாடும் தனது சொந்த பிரதமரின் பாதுகாப்பு குறித்து சமரசம் செய்துகொண்டால், தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை கடுமையான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த பதிவை ரீட்விட் செய்த பிரபல நடிகர் சித்தார்த் ஆபாச வார்த்தையை பயன்படுத்தி கருத்து தெரிவித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. தற்போது இந்த சர்ச்சை பூதாகரமான வெடித்துள்ள நிலையில் சித்தார்த்த மீது பெண்களை ஆபாசமாக சித்திரித்த வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். தற்போது இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சித்தார்த்த மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் பெண் வீராங்கனை குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த சித்தார்த் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாவுக்கும் ரேகா சர்மா கடிதம் எழுதியுள்ளார். தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தான் தவறாக எந்த வார்த்தையையும் பயன்படுத்தவில்லை என்று நடிகர் சித்தார்த்த மறுப்பு தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “