நாட்டிலேயே ரூ.931 கோடி சொத்துடன் பணக்கார முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார். வெறும் ரூ.15 லட்சத்துடன் ஏழை முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார் என ஜனநாயகத்திற்கான சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நமது நாட்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 31 முதல்வர்கள் உள்ளனர். இதில் மேற்குவங்க முதல்வர் மம்தா, டெல்லி முதல்வர் அடிசி ஆகியோர் மட்டுமே பெண்கள்.
இந்த நிலையில் ஒவ்வொரு முதல்வருக்கும் உள்ள சொத்து மதிப்பு குறித்து ஜனநாயகத்திற்கான சீர்திருத்த சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் நாட்டிலேயே அதிக சொத்து மதிப்புடன் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு முதல் இடத்தில் உள்ளார். சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.931 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு ரூ.332 கோடி சொத்துக்களுடன் இரண்டாவது பெரிய பணக்கார முதல்வராக உள்ளார். கர்நாடகாவின் சித்தராமையா ரூ.51 கோடிக்கு மேல் சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் ரூ. 8 கோடி சொத்து மதிப்புடன் 14 ஆவது இடத்தில் உள்ளது. புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி ரூ. 38 கோடி சொத்து மதிப்புடன் 6 ஆவது இடத்தில் உள்ளார்.
அதேசமயம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெறும் ரூ.15 லட்சம் சொத்துடன் ஏழை முதல்வராக உள்ளார். காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ரூ.55 லட்சம் சொத்துக்களுடன் ஏழை முதல்வர் பட்டியலில் இரண்டாவது இடத்திலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் ரூ. 1 கோடியுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.
நாட்டில் உள்ள 31 முதல்வர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி. ஒரு முதலமைச்சரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.52.59 கோடியாக உள்ளது. இந்தியாவின் தனிநபர் நிகர தேசிய வருமானம் 2023-2024ல் தோராயமாக 1,85,854 ஆக இருந்தபோது, ஒரு முதல்வரின் சராசரி வருமானம் ரூ.13,64,310 ஆகும்.
இது இந்தியாவின் சராசரி தனிநபர் வருமானத்தை விட 7.3 மடங்கு அதிகம். மேலும் 13 முதல்வர்கள் மீது கிரிமினல் வழக்குகளும், 10 முதல்வர்கள் மீது கொலை முயற்சி, கடத்தல், லஞ்சம் மற்றும் கிரிமினல் மிரட்டல் உள்ளிட்ட கடுமையான கிரிமினல் வழக்குகளும் உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.