இந்தியன்2 விபத்து நடந்ததை நடித்துக் காட்டச் சொல்கிறார்கள்: கமல்ஹாசன் வழக்கு

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்து வழக்கில் காவல்துறை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார்.

By: Updated: March 17, 2020, 04:15:32 PM

இந்தியன் 2 படபிடிப்பு விபத்து குறித்து போலீசார் நடித்துக்காட்டச் சொல்லி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாக நடிகர் கமல்ஹாசன் முறையீடு செய்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் விபத்து நடந்த இடத்தில் நாளை விசாரணைக்காக நேரில் ஆஜராக அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியன் – 2 பட பிடிப்பு தளத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி ராட்சத கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக நாளை சம்பவம் நடைபெற்ற ஈவிபி பிலிம் சிட்டியில் நேரில் விசாரணைக்கு ஆஜராகி, சம்பவம் நடந்தது குறித்து நடித்து காட்ட வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகர் கமல்ஹாசனுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.

இந்த வழக்கில், ஏற்கெனவே விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வரும் நிலையில், தன்னை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் கமல் தரப்பில், ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைக்கு 3 மணி நேரம் ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில் அவர் அரசியல்வாதியாக இருப்பதால், துன்புறுத்தும் நோக்கத்தோடு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்றும் சம்பவத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில் அதே இடத்திற்கு விசாரணைக்கு செல்ல இயலாது. இது விபத்து வழக்கு, கொலை வழக்கு அல்ல என்றும் வாதம் வைத்தார்.

அரசு தரப்பில், விபத்து நடந்த போது நடிகர் கமல் ஹாசன் சம்பவ இடத்தில் இருந்துள்ளார். அவர் நேரில் பார்த்த சாட்சி என்ற அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும்.

கமல் ஹாசன் மட்டுமல்லாமல் இந்தியன் 2 படத்தின் இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த 23 பேருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

படத்தின் கதாநாயகன் என்பதற்காக புலன் விசாரணையில் இருந்து விலக்கு அளிக்க முடியாது. இதில் எந்த அரசியல் உள் நோக்கமும் இல்லை என வாதம் வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதி, நடிகர் கமல்ஹாசன் நாளை ஈவிபி பிலிம் சிட்டியில் விசாரணைக்கு நேரில் ஆஜராக அவசியமில்லை என்றும், புலன்விசாரணைக்கு பின்னர் தேவைப்படும் பட்சத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என நடிகர் கமலுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Indian 2 accident case kamal haasan plea police torture me by the name of inquiry chennai high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X