கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர் மீண்டும் இணையும் இந்தியன் 2 படம், மீண்டும் சிக்கலில் மாட்டியுள்ளது. 'இந்தியன் 2' என்ற படத்தை எடுக்கும் விஷயமே தங்களுக்கு தெரியாது என தெரிவித்துள்ள லைகா நிறுவனம், இதன் மூலம் நான்கரை கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி இருப்பதாக கருணாமூர்த்தி மீது குற்றம்சாட்டியுள்ளது.
முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம், அந்நிறுவனத்தில் ஆலோசகராக இருந்த ஐங்கரன் கருணாகரன் மீதும், அவரது உதவியாளர் பானு மீதும் 120 கோடிகளுக்கும் மேலான பணத்தை ஏமாற்றி உள்ளதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளது.
இது குறித்து லைக்கா நிறுவனம் அளித்த புகார் மனுவில், ஆரம்ப காலக்கட்டங்களில் ஆலோசகராக கருணாகரன் எங்களுடன் வந்து இணைந்தார். நிதி மேலாண்மை பொறுப்பு முழுவதுமாக நம்பிக்கையின் அடிப்படையில் கருணாமூர்த்தியிடம் ஒப்படைத்திருந்தோம்.அவருடைய கவனத்திற்கு செல்லாமல் எங்கள் அலுவலகத்தில் இருந்து எந்தவொரு மின்னஞ்சலும், காசோலையும் செல்லாது என்கிற அளவுக்கு அவருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் சுதந்திரம் கொடுத்திருந்தோம். அவர் ஊரில் இல்லாத நாட்களில், அவரது உதவியாளர் பானு உத்தரவில்லாமல் எந்தவொரு காசோலையும் யாருக்கும் வழங்கப்படாத நிலையே இருந்தது. இந்நிலையில், கடந்த 2,3 ஆண்டுகளாகவே எங்களது நம்பிக்கையை கருணாகரன் சிதைத்து விட்டார். எங்கள் கவனத்திற்கு கொண்டு வராமலேயே பல படங்களின் சாட்டிலைட் உரிமைகளிலும், வெளிநாடு உரிமைகளிலும் பல கோடிக்கணக்கான ரூபாய்கள் மோசடி செய்திருக்கிறார். இதற்கு அவருடைய உதவியாளர் பானுவும் உடந்தையாக இருந்துள்ளார்.
படங்களை வெளிநாடுகளில் விற்பது தொடர்பாக எங்களுடன் எழுத்துப்பூர்வமாக எந்தவிதமான ஒப்பந்தமும் போடவில்லை.
எங்கள் அனுமதி இல்லாமலேயே சிம்பு நடித்த ‘வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தைத் தயாரித்ததன் மூலம் எங்களுக்கு ரூ.14 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதே போல் இந்தியன் 2 படமும் எங்களின் கவனத்திற்கு வராமல் அவரே தன்னிச்சையாக எடுத்த முடிவு. அதன் மூலமாக எங்களுக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படுத்தியுள்ளார். ஓவர்சீஸ் ரைட்ஸ் விற்றது வகையிலேயே ரூ.90 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளார். எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கும், கட்டுமான நிறுவனத்திற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அவருக்கு நெருக்கமான கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.25 கோடி பணத்தை சட்டவிரோதமாக எங்களுக்கு தெரியாமல் பரிமாற்றம் செய்திருக்கிறார். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து லைக்கா நிறுவனம் இழந்த பணத்தை மீட்டுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில், ஐங்கரன் கருணாகரன் இப்படி கோடிக்கணக்கில் ஏமாற்றியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.