Indian 2 set accident : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படபிடிப்பு நடைபெற்று வருகிறது. நேற்று இரவு படபிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூவர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். முறையான முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படபிடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட கிரேன் விழுந்து நொறுங்கியுள்ள இடம்
கமல் ஹாசன் வருத்தம்
எத்தனையோ விபத்துகளை பார்த்திருக்கின்றேன். இருப்பினும் இந்த விபத்து மிகவும் கொடூரமானது. என்னுடைய மூன்று சகாக்களை இழந்து நிற்கின்றேன். என்னுடைய வலி அவர்கள் குடும்பத்தாரின் வலியை விட அதிகமானது என்றும் அவர் வருந்தி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
இறந்தவர்கள் யார்?
லைக்கா நிறுவனம் தயாரிக்க, இயக்குநர் சங்கர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படபிடிப்பு பூந்தமல்லியில் அமைந்திருக்கும் ஈ.வி.பி. ஃபில்ம் சிட்டியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பில் பயன்படுத்தப்பட்ட கிரேன் நொறுங்கி விழுந்ததில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இறந்து போன மூன்று நபர்களின் விபரங்கள் குறித்து லைக்கா நிறுவனம் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதன்படி கிருஷ்ணா (துணை இயக்குநர்), சந்திரன் (ஆர்ட் அசிஸ்டெண்ட்) மற்றும் மது (ப்ரொடெக்சன் அசிஸ்டெண்ட்) ஆகியோர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.
நடிகர் கமல் ஹாசன், நடிகை காஜல் அகர்வால் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் விபத்து நடந்த நேரத்தில் படபிடிப்பு தளத்தில் தான் இருந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை.
காவல்துறை விசாரணை
இந்த விபத்தில் மஞ்சாங், குமார், கலை சித்திரன், குணபாலன், திருநாவுக்கரசு, முருகதாஸ் உட்பட காயம் அடைந்த 10 நபர்களும் தண்டலம் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஈ.வி.பி. ஃபிலிம் சிட்டிக்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரேன் ஆப்பரேட்டர் ராஜன் என்பவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"