நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் தமிழகத்தில் கலைகட்டியுள்ளது, அந்த வகையில் திருச்சியில் மாரத்தான் ஓட்டத்தின் மூலம் நாட்டுப்பற்றை ஏற்படுத்துவதுடன், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சுவாமி விவேகானந்தர் ஆன்மீக பண்பாட்டு மையம் என்ற அமைப்பின் சார்பில் 75-வது சுதந்திர தின மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் இருந்து தொடங்கி நீதிமன்றம், கண்டோன்மென்ட், தபால்நிலையம், டிவிஎஸ் டோல்கேட் வரையிலான 5 கிமீ மாரத்தான் ஓட்டத்தில் ஆண்கள், பெண்கள் என ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முன்னதாக இந்த மாராத்தான் ஓட்டத்தினை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணைஆணையர் அருண் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதில் பங்கேற்ற திரளான ஆண்கள் மற்றும் பெண்கள் கையில் தேசியக் கொடியினை ஏந்தியபடி மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் அண்ணா விளையாட்டு அரங்கம் மைதானத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மாரத்தான் ஓட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்த வீரர், வீராங்கணைகளுக்கு தனித்தனியே 15 ஆயிரம், 10 ஆயிரம், 5 ஆயிரம் என பரிசுத்தொகையை வழங்கி வாழ்த்தினார்.
இந்த மாரத்தான் போட்டிக்கு பதிவுக் கட்டணமாக அனைவரிடமும் பாஜக பிரமுகர்கள் மூலம் ரூ.150 வசூலிக்கப்பட்டது. இந்த வசூலிப்புக்கு மக்கள் நீதி மய்யம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. 75-வது சுதந்திரதின மாரத்தான் ஓட்டம் என்ற பெயரில் ஒரு நபருக்கு ரூ.150 கட்டணம் என்றால் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கும் இந்த மாரத்தான் மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்து அவற்றில் வெறும் சில ஆயிரங்களை பரிசாக வழங்கி மீதியை 75-வது சுதந்திரதின மாரத்தான் என்ற பெயரில் ஏற்பாட்டுக் குழுவினர் சுருட்டிக்கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சுதந்திரத்தின் பெயரால் தனிநபர் ஆதாயத்திற்காக போட்டி நடத்துபவர்கள், தங்களது சொந்த செலவில் மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெற்று நடத்திக் கொள்வது தான் சரியானது. தனிநபர் விளம்பரத்திற்காக தேசிய ஒருமைப்பாட்டை கூறுபோட்டு விற்கும் இந்த விதமான செயல்கள் குறித்து எழும் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான எஸ்.ஆர்.கிஷோர்குமார் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.