கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணுசக்தி துறையின் செயலர் மற்றும் இந்திய அணுசக்தி கமிஷனின் தலைவருமான சேகர் பாசு, “கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகளும் சிறப்பாக இப்போது ஓடிக்கொண்டிருக்கின்றன” என்றும், இரண்டிலும் மின்னுற்பத்தி நடைபெறுகிறது என்றும் தெரிவித்தார். ஆனால், கூடங்குளத்தில் இரண்டாவது உலையில் மின்னுற்பத்தி பலமுறை தள்ளிவைக்கப்பட்டு, நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் துவங்கும் என பதினைந்து நாட்களுக்கு முன்னர் கூடங்குளம் அணு உலை வளாகத்தின் இயக்குனர் திரு. ஜின்னா அறிவித்திருந்த நிலையில், இரண்டாவது உலை பற்றிய எந்த செய்தியும் இன்னமும் வெளியாகவில்லை. இப்படியிருக்கையில், அனுசக்தி கமிஷனின் தலைவர் சேகர் பாசு முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார்.
இதுகுறித்து, ’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பின் பொறியாளர் சுந்தர்ராஜன் தன் முகநூல் பக்கத்தில் தெரிவித்ததாவது, “உண்மை என்னவென்றால், கூடங்குளத்தில், முதல் உலை மட்டும்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு உலையில் இருந்து மட்டுமே மின்னுற்பத்தி நடைபெறுவதை நாம் “தெற்குபிராந்திய மின்பகிர்மான மையத்தில்” (SRLDC) தெரிந்துகொள்ளலாம், அதை நாம் அதன் இணையத்தில் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம்.”, என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அணுசக்தி துறை ஆண்டுதோறும் பொய்யான தரவுகளை அளித்துவருவதாகவும் அவர் தன்னுடைய பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார். “கடந்த பல ஆண்டுகளாக அந்த துறை சொல்லிவரும் ஒரு விசயம், வரும் இந்த ஆண்டிற்குள் இத்தனை மெகாவாட் மின்சாரத்தை அணுசக்தி துறை உற்பத்தி செய்யும்” என்று அறிவிப்புகள் மட்டும் வரும், ஆனால் அதில் 10 சதவீதம் கூட அந்த வருடத்தில் உற்பத்திசெய்திருக்க முடியாது. ஒரே ஒரு உதாரணம், 2000 ஆண்டுக்குள் இந்தியாவின் மின்தேவைக்கு 20,000 மெகாவாட் மின்சாரத்தை அணுசக்தியில் இருந்து பெறுவோம் என்று 70களில் அறிவித்தது அணுசக்தி துறை. ஆனால், 2000-ஆம் ஆண்டில் அணுசக்தியின் பங்களிப்பு வெறும் 2,500 மெகாவாட் தான்.”, என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில், வரும் ஆண்டு மே மாதம், இந்தியாவின் முதல் ஈனுலை (சோதனை உலையாக இல்லாத ஈனுலை) செயல்பட துவங்கும் எனவும், தேனி மாவட்டத்தில், இந்தியாவின் நியூட்ரினோ திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் சேகர் பாசு அறிவித்ததற்கு ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.