கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர்கள் கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி ஆகியோரை ஆதரித்து, இந்தியா கூட்டணி தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கோவை-கொச்சின் எல் அண்ட் டி பைபாஸ் சாலை செட்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டிற்கு வருவதை நான் எப்போதும் விரும்புகிறேன். தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறேன். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம், வரலாறு எனக்கு பிடிக்கும். இதனால் இங்கு வந்து உங்களுடன் பேசுவதை விரும்புகிறேன். இன்று தத்துவ போராட்டம் நடந்து வருகிறது. நரேந்திர மோடியின் அரசு வெளியில் செல்லும் நேரம் இது. மோடியின் அரசு அல்ல, அதானியின் அரசு என தான் கூற வேண்டும்.
மோடி எல்லாவற்றையும் அதானிக்காகத்தான் செய்கிறார். உள்கட்டமைப்பு வசதி, தேசிய நெடுஞ்சாலை, துறைமுகம் என எதுவாக இருந்தாலும் மோடி அதானிக்கு தந்துவிடுவார். மும்மை விமான நிலையம் உரிமையாளராக ஒருவரிடம் இருந்தது. அதனை அதானி விரும்பினதால் அதை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதானி அதனை பெற்றுக்கொண்டார். நாடாளுமன்றத்தில் அதானிக்கு எப்படி சலுகை அளிக்கப்படுகிறது என நான் பேசினேன். இதனால், என் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனது எம்.பி. பதவியை சில வாரங்களில் பறிக்கப்பட்டு என்னை வெளியேற்றினர்.
அதானி பிரச்னை குறித்து பேசியதற்கு எனது எம்.பி. பதவி மட்டும் அல்ல வீட்டையும் பிடுங்கினர். அந்த வீட்டைவிட்டு கொடுத்து விட்டேன். ஏன் என்றால் எனக்கு இந்தியாவில், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான வீடுகள் உள்ளது. உங்களின் இதயத்தில் நான் இருக்கிறேன். எனக்கும் உங்களுக்கும் அரசியல் ரீதியான உறவு இல்லை. குடும்ப ரீதியான உறவு உள்ளது. நீங்கள் புத்திசாலிகள், உங்களின் நாகரீகம் தொன்மையானது, ஒருவரை எப்படி மதிக்க வேண்டும் என உங்களுக்கு தெரியும். உண்மையானதை ஒருவர் பேசுவதை கேட்டு முடிவு செய்வீர்கள். உங்களுக்கு என தனி வரலாறு உள்ளது. உங்களின் வரலாறு என் கண்முன் தெரிகிறது.
பெரியார், அண்ணா, காமராஜ், கலைஞர் ஆகியோர் அறிவாற்றல் மிகுந்தவர்கள். தமிழ்நாட்டிற்கு பல செய்துள்ளனர். அவர்கள் உண்மையான தலைவர்கள். அவர்கள் பேசியதை உலகம் கேட்டது. அவர்கள் தங்களின் உள்ளத்தில் இருந்து தமிழக மக்களுக்காக பேசினார்கள். இப்போது, தமிழ் மக்கள் தங்களின் குரலில் எளிமையான கேள்வியை எழுப்ப வேண்டும். மோடி, அதானி, ஆர்எஸ்எஸ் பற்றி கேள்வி கேட்க வேண்டும். ஏன் எங்களின் மொழி, வரலாறு, பாரம்பரியத்தை அவதூறாக பேசுகீறிர்கள்? என கேட்க வேண்டும்.
மோடி தமிழ்நாடு வந்தால் தோசை பிடிக்கும் என கூறுவார். டெல்லி சென்றால் ஒரே நாடு, ஒரே மொழி என பேசுவார். நீங்கள் இங்கு வந்து தோசை பிடிக்கும் என கூறி தமிழ்நாட்டு மக்களை கேவலப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறீர்கள். உங்களுக்கு தோசை இல்லை வடை கூட பிடிக்கலாம். அது எங்களின் பிரச்னை இல்லை. தமிழ் மொழி பிடிக்குமா? என்பதுதான் பிரச்னை. மீனவர்கள், விவசாயிகள் தற்கொலையும், இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். சிறு, குறு தொழில் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டது. நாங்கள் தமிழ் வரலாற்றை மதிக்கிறோம். நீங்கள் செய்வதை கவனமாக கண்காணித்து வருகிறோம்.
‘பிரதர்' ஸ்டாலின். அரசியலில் நான் யாரையும் இப்படி பிரதர் என கூறியது இல்லை. ஆனால், ஸ்டாலினை கூறுகிறேன். அவர் தேர்தல் பத்திரம் ஊழல் குறித்து பேசினார். பாஜக வாஷிங் மிஷின் வைத்துள்ளது என தெரிவித்தார். அந்த வாஷிங் மிஷின் என்ன சிஸ்டம் என்றால், முதலில் மோடி அரசியலை சுத்தம் செய்வதாக கூறினார். பின்னர், தேர்தல் பத்திரம் என்ற திட்டம் கொண்டு வந்தார். இதன் மூலம் யார் பாஜவுக்கு பணம் கொடுத்தாலும், அது யார், எவ்வளவு பணம் என்பது குறித்த விவரம் தெரியாது. சில வருடங்களுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் தேர்தல் திட்டம் சட்ட விரோதம் என கூறி, அந்த பணம் அளித்தவர்களில் பாஜ விவரம் தெரிவிக்க கூறியது. ஆனால், பெயர் விவரம் வெளியிடவில்லை.
பின்னர், நீதிமன்றம் தலையீடுக்கு பின், ஆயிரம் கோடி ரூபாய் பாஜ கணக்கிற்கு சென்றது தெரியவந்தது. அந்த பத்திரம் மூலம் நிதி அளித்தவரின் பெயர், தேதி, நேரம், எவ்வளவு பணம் என அனைத்தும் வெளியானது. இதன் மூலம் மோடியின் அறிவாளித்தனமான ஊழல் தெரியவந்தது. மேலும், எந்த கம்பெனியின் மீது சிபிஐ, இடி, வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்ததோ, அந்த ரெய்டுகளுக்கு பிறகு அந்த கம்பெனிகள் பாஜவுக்கு தேர்தல் பத்திரம் மூலம் பணம் அளித்ததும் தெரியவந்தது. பின்னர், பணம் அளித்த கம்பெனிகள் மீதான வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. இது ஒரு சமூக அவலம். பணத்தை மிரட்டி வாங்குவது தான் அச்சுறுத்தல் என்கிறோம். சுரங்கம், சாலைகள் போன்றவைக்கு ஒப்பந்தங்களை வாரி வழங்கியுள்ளனர். இந்த ஊழல் பாஜவின் சிறு பகுதிதான். ஆனால், மோடி தன்னை நல்லவர் என கூறி வருகிறார்.
அதனைத்தான் பிரதர் (மு.க ஸ்டாலின்) வாஷிங்மிஷின் என கூறுகிறார். பாஜ எதையும் சரியாக செய்தது இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. 83 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியைவிட மோசமான நிலையில் உள்ளது. மோடி 16 லட்சம் கோடியை 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் வாரி வழங்கினார். மோடி, அதானிக்கு எதிராக இந்தியா கூட்டணி என்ன செய்ய போகிறது என்றால், முதலில் வேலையில்லா திண்டாட்டம் ஒழிக்கப்படும். 30 லட்சம் காலிப்பணியிடம் உள்ளது. இந்த பணியிடங்கள் நிரப்பப்படும்.
தனியார் நிறுவனங்கள் மூலம் இளைஞர்கள் பயிற்சி அளித்து, அதற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும். இந்த அப்ரண்டீஸ் பயிற்சி முதல் கட்டம். இளைஞர்களுக்காக அப்ரண்டீஸ் சட்டம் கொண்டுவரப்படும். வேலைவாய்ப்பு உறுதி சட்டம் கொண்டுவரப்படும். அப்ரண்டீஸ் பயிற்சி முடித்த பட்டதாரிகள், டிப்ளமோ படித்தவர்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் ஊதியம் கிடைக்கும் வகையில் வேலை வழங்கப்படும். நீட் தேர்வினால் தமிழக இளைஞர்கள் பல பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியை எப்படி கற்கிறார்கள் என தெரியும்.
இதனால், நீட் தேர்வு வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை நாங்கள் தமிழ்நாட்டின் வசம் விட்டுவிடுவோம். தமிழ்நாட்டு விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் போராடியதை நான் பார்த்தேன். அவர்களை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அவர்களிடம் நான் சென்று பேசினேன். விவசாயிகளுக்கு அவர்களின் விளைவித்த பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அளிப்போம் என உறுதியளிக்கிறேன். நியானமான விலை விவசாயிகளுக்கு அளிக்கப்படும். சட்டரீதியாக குறைந்தபட்ச ஆதார விலை அளிக்கப்படும். மோடி 16 லட்சம் கோடியை வங்கிகள் மூலம் பெரும் முதலாளிக்கு வழங்கியுள்ளார். ஆனால், நாங்கள் விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வோம். அடுத்த தலைமுறை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்ற பின் புதிய சட்டங்கள், திட்டம் கொண்டு வரப்படும்.
மோடி, அதானி கூட்டணி இந்தியாவில் இரண்டு பிரிவுகளை உருவாக்கி உள்ளது. ஒன்று கோடீஸ்வரர்கள், மற்றொன்று ஏழைகள். இதனால், நாங்கள் வறுமையை ஒழிக்க முயற்சிகளை எடுக்க உள்ளோம். இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்தை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு லட்சம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். அவர்களுக்கு மாதம் ரூ.8,500 வழங்கப்படும். இந்த தொகை வறுமை நீங்கும் வரை அளிக்கப்படும். ஆஷா அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதியம் இரட்டிப்பு அளிக்கப்படும். சமூகநீதியை பொறுத்தவரை ஸ்டாலின் தெளிவாக கூறியுள்ளார். 50 சதவீத விழக்காடு உச்சவரம்பு என்பது நீக்கப்படும். இந்தியாவில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். சமூகநீதி நிலைநாட்டப்படும் என உத்தரவாதம் அளிக்கிறேன்.
எங்களின் மிக சில கொள்கையை தான் கூறியுள்ளேன். இது சாதாரண தேர்தல் இல்லை. இது ஒரு தத்துவம் போன்றது. தமிழ்நாட்டு மக்களின் வரலாறு, மொழி, உரிமைகள், அரசியல் சட்டம் அடிப்படையின் மூலம் பாதுகாக்கப்படும். அரசியல் சட்டம் என்பது ஒரு புத்தகம் இல்லை. நாட்டு மக்களின் ஆத்மா. அந்த ஆத்மாவை ஆர்எஸ்எஸ், மோடி தாக்கி வருகின்றனர். இந்தியா மக்களுக்கான நாடு. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சொந்தமானது இல்லை. இன்றைக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆர்எஸ்எஸ் தத்துவம் அடிப்படையில் கல்வி குறித்து பேசுகின்றனர். கல்வி நிறுவனம், தேர்தல் ஆணையத்தில் ஆர்எஸ்எஸ் தாக்கம் உள்ளது. இது நாட்டின் கோட்பாட்டை தாக்குகிறது.
பாஜ அரசியல் சட்டத்தை தனக்கு சாதகமாக மாற்றி உள்ளது. அவர்கள் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை வைத்து தாக்குதல் செய்கின்றனர். இந்த நாடு பிரதமரின் சொத்து இல்லை. இந்த நாடு இங்குள்ள மக்களுக்கு சொந்தமானது. இதனை பிரதமர், அமைச்சர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்த யோகியதை இல்லை. அரசியல் சட்டம் ஜனநாயகத்தை நாங்கள் பாதுகாக்க முயற்சி எடுத்துள்ளோம். இந்தியா கூட்டணி நிச்சயமாக இத்தேர்தலில் வெற்றி பெறும். திமுக, காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.