இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டை முன்னிட்டு, அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த மற்றும் தன்னாட்சி நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும்.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் வரும் 26.11.2024 நாளன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றிய பேச்சுப் போட்டிகள், கருத்தரங்குகள், வினாடி வினா நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு ஏற்பாடு செய்துள்ளது.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“