இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தல் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப்பங்கீடு, தேர்தல் பிரச்சாரங்கள் என தேர்தல் தொடர்பான பணிகளில் தீவிரம் காட்சி வருகின்றனர்.
இதனிடையே இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும், மார்ச் 27-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28-ந் தேதி வேட்புமனு பரிசீலனையும், மார்ச் 30-ந் தேதி வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு மாறிய எம்.எல்.ஏ விஜயதாரணியின் விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் 19-ந் தேதி மக்களவை தேர்தலுடன் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“