scorecardresearch

Ietamil impact: 10 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் திருத்து வாய்க்கால்

கடந்த 10 ஆண்டுகளாக துார்வாராமல் விடப்பட்ட திருத்து வாய்க்கால் குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழில் செய்தி வெளியான நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Ietamil impact: 10 ஆண்டுகளுக்குப் பிறகு தூர்வாரப்படும் திருத்து வாய்க்கால்

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகேயுள்ள திறுத்து வாய்க்கால் என்ற பாசன வாய்க்கால் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் செடி கொடிகள் முளைத்து புதர்கள் மண்டி கிடப்பதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து அதுகுறித்த செய்தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில்  திங்கள்கிழமை இரவு வெளியானது.( Read here: https://tamil.indianexpress.com/tamilnadu/thanjai-farmers-request-stalin-to-visit-thirutthu-drain-460816/ )

அச்செய்தியின் விளைவாக,  திறுத்து வாய்க்காலில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் 5 இயந்திரங்கள் உதவியுடன் தூர்வாரும் பணிகள்; போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. 
மேற்படி தூர்வாரும் பணியை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சாக்சேனா செவ்வாய்க்கிழமை மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ.80 கோடி செலவில் ஆறுகள், பாசன வாய்க்கால்கள், வடிகால்கள் தூர்வாரும் பணிகள் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கப்பட்டு நேற்று (மே 31) வரை முழுவீச்சில் நடைபெற்றன.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மே 30, மே 31 ஆகிய இரண்டு நாட்கள் மின்னல் வேக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிலையில், கல்லணையிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ள குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரியக்கூடிய திறுத்து பாசன வாய்க்காலில் கடந்த 10 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை என அப்பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.

“இவ் வாய்க்காலில் கடந்த 10 வருடங்களாக தூர் வாரப்படாததால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. காலப்போக்கில் அதன் அகலம் குறைந்து விட்டது.  5 மீட்டர் அகலம் கொண்ட  வாய்க்கால் தற்போது சுருங்கி ஒரு மீட்டர் அகலம் கூட இல்லை. தற்போது செடி கொடிகள் முளைத்து புதர் மண்டிக் கிடக்கிறது.  நீர்வள துறையினரால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான (2022-2023) தூர்வாரப்படும் வாய்க்கால்களின் பட்டியலில் இவ் வாய்க்காலும் இடம் பெற்றிருந்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ திங்கள்கிழமை (மே 30)வரை மேற்படி வாய்க்காலில் ஒரு கைப்பிடி மண் கூட தூர்வாரப்படவில்லை,” என காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட துணைச் செயலாளர் சுகுமாரன் கவலையுடன் தெரிவித்த கருத்துக்களை அச் செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம்.

அச்செய்தியின் விளைவாக, திறுத்துகால் வாய்க்காலில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிமுதல் 5 இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணி  நடைபெற்று வருகிறது.

மேற்படி தூர்வாரும் பணியை செவ்வாய்க்கிழமை காலை நேரில் வந்து  பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், வாய்க்காலை ஆக்கிரமிப்பு செய்து தனியாரால் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பாலங்களை எவ்வித பாரபட்சமின்றி அகற்றுமாறு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதேபோல, அன்று மாலை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சாக்சேனா மேற்படி வாய்க்கால் தூர்வாரும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பொதுப்பணித்துறை திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, பொதுப்பணித்துறை தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் ஆகியோர் உடனிருந்தனர். 
தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டிக் கிடந்த வாய்க்காலின் அவல நிலையை நேரில் கண்டு அதிர்ச்சியடைந்த கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சாக்சேனா, “எங்கே, வாய்க்காலையே காணோம்?” என அதிர்ச்சியுடன் கேட்டார். அவரது கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திணறினர்.

மேற்படி வாய்க்காலில் 2.8 கி.மீ நீளத்திற்கு தூர்வாரப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு நேற்று காலை 10 மணியிலிருந்து இரவு 9 மணி வரை 3 ஜெசிபி இயந்திரங்கள், 2 ஹிட்டாசி இயந்திரங்கள் என மொத்தம் ஐந்து இயந்திரங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. அதன் விளைவாக நேற்று ஒரே நாளில் 2 கி.மீ நீளத்திற்கு வாய்க்கால் தூர்வாரப்பட்டது. மீதமுள்ள 800 மீட்டரை தூர் வாரும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

10 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் முதல் முறையாக திறுத்து வாய்க்காலில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டு துறுத்து வாய்க்காலில் தூர்வார காரணமாக இருந்த தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.
“கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருந்த வாய்க்காலில் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்தில் வெளியான ஒரு செய்தியின் விளைவாக தற்போது போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படியெல்லாம் நடக்கும் என நான் ஒருபோதும் நினைத்ததில்லை. என்னால் நம்பவே முடியவில்லை,” எனக் கூறி ஆச்சரியப்படுகிறார்  திருப்பூந்துருத்தி சுகுமாரன்.

உரிய முறையில் செய்தி வெளியிட்டு திறுத்துகால் வாய்க்காலில் 10 ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் தூர்வாரும் பணி நடைபெற காரணமாக இருந்த தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இப்பகுதி விவசாயிகள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார் திருப்பூந்துருத்தி சுகுமாரன்.

எஸ்.இர்ஷாத் அஹமது
தஞ்சாவூர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Indian express tamil story impact thirutthu canal desilting work started after 10 years

Best of Express