கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கலை கல்லூரியின் வைர விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாணவிகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கல்லூரி அறக்கட்டளை நிர்வாகிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது பள்ளி மாணவர்களுக்கு சந்திராயன் விண்கல மாதிரி வடிவங்களை பரிசாக வழங்கிய நிர்மலா சீதாராமன், தொடர்ந்து மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் பெண்கள் முன்னேற்றம், அரசியலில் பெண்களின் பங்களிப்பு, பெண்களுக்கான தடைகளை கடப்பது போன்ற கருத்துக்களை பகிர்ந்து மாணவிகள் மத்தியில் ஊக்கமளிக்கும் வகையில் பேசினார்.
தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய அவர், 'பெண்களை மையப்படுத்திய அரசாக இல்லாமல், பெண்களுக்கான அரசாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. முன்பு பெண் குழந்தைகள் பிறந்தாலே கொல்லப்பட்டு வந்த சூழல் இருந்தது. இப்போது 'Beti ("bachao Beti padhao") திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் கொண்டாடப்படுகின்றனர்.
தூய்மையை வலியுறுத்தும் வகையில் ஸ்வச் அபியான் நிகழ்ச்சிகளின் மூலம் தூய்மையான பாரதத்தை படைக்கும் முயற்சியில் செயல்பட்டு வருகிறோம். பெண்கள் சமையலறை அடுப்பில் புகையில் சிக்கி பல்வேறு வகையில் நோய்வாய் பட்டு வந்தனர். இப்போது அனைவருக்கும் எல்.பி.ஜி கேஸ் கனெக்சன் கொடுக்கப்பட்டு அதற்கான மானியமும் வழங்கப்பட்டு பெண்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம், வங்கி கடன் ஆகியவற்றில் மகளிர் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக முத்ரா கடன் உதவி திட்டத்தில் 65% பயனாளிகள் பெண்களாக உள்ளனர். பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் இந்த சூழலில், பெண்கள் ராணுவத் துறையிலும் உயர் பதவிகளை பெற்று சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர்.
பெண்களுக்கான சம்பளத்துடன் கூடிய பிரசவகால விடுப்பு பாரதி ஜனதா கட்சியின் ஆட்சியில் சுமார் ஆறு மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. பாலின பேதம் இன்றி பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக சாதனை புரிய பாஜக அரசு சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாணவிகளும் இந்த திட்டங்களை பயன்படுத்தி இந்தியாவை முன்னேற்ற உறுதுணையாக இருக்க வேண்டும் என பேசினார்.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“