சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் சினிமா பாணியை மிஞ்சும் அளவிற்கு அரங்கேறிய கொள்ளை பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு, கொளத்தூர் நகைக்கடை ஒன்றில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. 3.5 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் மதுரவாயில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொள்ளப்பட்டார்.
ரியல் தீரனின் இழப்பு காவல் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களான,நாதுராம் உள்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், சென்னை விருகம்பாக்கம் தனியார் வங்கியில் அரங்கேறிய கொள்ளை காவல் துறையினருக்கு மீண்டும் ஒரு சாவாலாக அமைந்துள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மிகவும் பரபரப்பாக இயங்ககூடிய வங்கிகளில் ஒன்று. நேற்றையை தினம் இந்த வங்கியின் லாக்கர் உடைக்கப்பட்டு வாடிக்கையாளர்களின் 33 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
ஞாயிறு விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை காலை வங்கி ஊழியர்கள் வங்கியின் கதவை திறந்துள்ளனர். அப்போது, அறைகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது. ஓடி போய் பார்த்த ஊழியர்கள் வங்கியின் லாக்கர்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த தீயணைப்பு சிலிண்டர்கள் கட் செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தன.
அதிலிருந்து வெளியேறிய புகைத்தான் அறை முழுவதும் பரவி இருந்துள்ளது. பின்பு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கொள்ளை நடந்த லாக்கரை சோதனையிட்டனர். வங்கியின் பின்புறத்தில் ஓட்டை போட்டு உள்ளே குதித்த திருடர்கள் வெல்டிங் மூலம் 2 லாக்கர்களை உடைத்துள்ளனர்.
பின்பு அதிலிருந்த 33 லட்சம் ரூபாய் பணத்தையும், 133 பைகளில் இருந்த தங்க நகைகளையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல், திருடுவதற்கும் முன்பே வங்கியில் இருந்த சிசிடிவி கேமராக்களை அணைத்து வைத்துள்ளனர். அதன் டிவி ஆரையும் சேர்த்து தூக்கிச் சென்றுள்ளனர்.
வங்கியில் கொள்ளையிடுவதற்கு சுமார் 1 மாதம் முன்பே திட்டம் தீட்டப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை தேர்வு செய்த கொள்ளையர்கள், கேஸ் சிலிண்டர்கள், கேஸ் கட்டிங் கருவி, ஆக்சிஜன் சிலிண்டர் முதலானவற்றை வங்கி முதல் நாளே வங்கியில் வைத்துள்ளனர்.
இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது வங்கி பற்றி முழு விபரமும் தெரிந்த ஒரு நபர் தான் இந்த கொள்ளையில் ஈடுப்பட்டிருக்க முடியும் என்று, போலீசார் கணித்தனர்.அவர்களின் கணிப்பு படி, வங்கியில் ஹவுஸ் கீபிங் வேலை செய்து வந்த, சபீல் லால்சந் என்ற வடமாநில இளைஞர் தலைமறைவாகியுள்ளான். அவனும், அவனது கூட்டாளியும் சேர்ந்து தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
கேஸ்கட்டர் மெஷினை சாதாரண ஆள் இயக்க முடியாது. எனவே அவர்களுக்கு வெல்டிக் ஊழியர் ஒருவரும் உதவி செய்திருப்பது, போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது.இந்த கொள்ளை சம்பவத்தில் வாடிக்கையாளர்களின் நகைகள் மற்றும் பணமும் திருடப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இந்த கொள்ளை சம்பவத்தை விசாரிக்க காவல்துறை ஆணையர் அரவிந்தன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.