பிரபலங்கள் வாக்குப் பதிவில் சுவாரசியம்: கட்டி அணைத்து அன்பை பரிமாறிய பிரேமலதா- தமிழிசை
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் பலரும் காலை முதலே தங்களது ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் பலரும் காலை முதலே தங்களது ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ள நிலையில், சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை செயல்படுத்தி வருகின்றனர்.
Advertisment
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம் உட்பட 21 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 20-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி முடிவடைந்தது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் என பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 17) மாலையுடன் பிரச்சாரம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இன்று (ஏப்ரல் 19) காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இ.வி.எம் எந்திரம் கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி மகளிர் கல்லூரி வாக்குச்சாவடிக்கு தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார்.
தமிழகத்தில் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் காலை முதலே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
எப்போதும் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களிக்கும் நடிகர் அஜித், இன்று வாக்குப்பதிவு தொடங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு மையத்திற்கு வந்துள்ளார். தனது வாக்குச்சாவடியான திருவான்மையூர் மாநகராட்சி பள்ளிக்கு வந்த நடிகர் அஜித் 30 நிமிடங்கள் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
தே.மு.தி.க கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகனும், விருதுநகர் தொகுதியின் வேட்பாளருமான விஜயபிரபாகரன். இளையமகன் சண்முகப்பாண்டியன் ஆகியோருடன் சென்னை சாலிகிரமம் பகுதியின் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். அந்த நேரத்தில் அங்கு வந்த தென்சென்னை தொகுதியின் பா.ஜ.க.வேட்பாளர் தமிழிசை சௌந்திரராஜன் – பிரேமலதா விஜயகாந்த் இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் விஜயகாந்த் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட தமிழிசை, ஒரு வேட்பாளராக பெருமை மிகு வாக்காளரை சந்தித்தில் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
தனது சொந்த் ஊரான சேலம் மாவட்டம் சிலுவைபாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்திய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,புதிய தலைமுறை வாக்காளர்கள், பெண்கள், இளையஞர்கள் என அனைவரும் தவறாமல் வாக்குச்சாவடிக்கு சென்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்றுகேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
ஒ.பன்னீர்செல்வம்
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தனது வாக்கை செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,10 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்த மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் உறுதியாக வெற்றி பெறுவேன். அ.தி.மு.க உங்கள் பக்கம் வரும். 2026-ல் அம்மாவின் ஆட்சியை நாங்கள் அமைப்போம். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் ஒரு தேர்தலாக இது அமையும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“