ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் பலர் தங்கள் பயண அவசரத்திற்காக தங்களது தொகுதி எம்.பியிடம் கடிதம் பெற்று ரயில்வே துறை அதிகாரிகளிடம் எமர்ஜென்சி கோட்டாவில் (இ.க்யூ) தங்களது பயண டிக்கெட்டை முன்பதிவு செய்து கொடுக்குமாறு வேண்டுகோள் விடுப்பர். அப்படி கொடுக்கும் அங்கீகார கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ரயில்வே நிர்வாகமும் பயணியின் டிக்கெட்டை உறுதிப்படுத்தும்.
அந்த வகையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒருவர் அவசர ஒதுக்கீட்டின் கீழ் ரயில் பயணம் மேற்கொள்ள திருச்சி எம்.பி.யின் போலி லெட்டர் பேடில் பரிந்துரைக் கடிதத்தை கொடுத்து ரயில் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவரது பரிந்துரை கடிதத்தை ஆய்வு செய்தபோது அது போலி என தெரிய வந்துள்ளது. இதனை போலியாக தயாரித்துக் கொடுத்த சங்கரன்கோவிலைச் சோ்ந்த இளைஞரை புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தினா் கைது செய்தனா்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நவ. 21-ஆம் தேதி சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை விரைவு ரயிலில் ஸ்டீபன் சத்தியராஜ் என்ற பயணிக்கு திருச்சி எம்.பி., துரை வைகோவின் லெட்டர் பேடில் பரிந்துரைக் கடிதம் (இ.கியு) அளிக்கப்பட்டு அவருக்கு அவசர ஒதுக்கீடு அடிப்படையில் பயணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பரிந்துரைக் கடிதத்தின் மீது சந்தேகம் கொண்ட சென்னை ரயில்வே டிக்கெட் பரிசோதர்கள் , அலுவலா்கள், திருச்சி எம்.பி., துரை வைகோவின் உதவியாளா் சங்கரைத் தொடா்பு கொண்டு விசாரித்தனா்.
அப்போது இந்த லெட்டர் பேட் எம்.பி யின் லெட்டர் பேடு அல்ல, அந்தப் பரிந்துரைக் கடிதம், எம்பி அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டதல்ல, அது போலியானது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், ரயிலில் பயணித்த பயணி ஸ்டீபன் சத்தியராஜின் தொடா்பு எண்ணில், எம்.பி-யின் உதவியாளா் சங்கா் பேசியபோது, அவா் புதுக்கோட்டை காந்திநகரைச் சோ்ந்தவா் எனக் கூறிய நிலையில், இந்த குற்றச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.
பாராளுமன்ற உதவியாளரின் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸாா், நீண்ட விசாரணைக்குப் பிறகு சங்கரன்கோவிலைச் சோ்ந்த ராம்குமாா் (வயது 30) என்பவா் தனது கணினி மையத்தில் இந்தப் போலி லெட்டர் பேடை தயாரித்து எம்.பி-யின் பரிந்துரைக் கடிதத்தை தயாா் செய்து கொடுத்ததைக் கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து கணேஷ்நகா் போலீஸாா், ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மேலும், இதுபோன்று ராம்குமார் போலி இ.கியூ பார்ம் அடித்து பண மோசடியில் ஏதும் ஈடுபட்டாரா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்.