நாட்டில் பெரும்பாலான மக்களால் விரும்பப்படும் பொதுபோக்குவரத்து ரயில். பயண அலுப்பு இன்றி நாடு முழுக்க சுற்றி வரலாம். ஆனால், ரிசர்வேஷன் கிடைக்காவிட்டால் அல்லல்தான்.
அதிலும் கூட்ட நேரங்களில் படும் துயரம் சொல்லிமாளாது. குறைந்த அளவிலான தூரம் என்றாலும் கடினமாகதான் இருக்கும். இதையெல்லாம் சரிபடுத்தும் வகையில் தற்போது ஒரு செம்ம ஆபரை ரயில்வே வழங்கியுள்ளது.
அதாவது, “ரயில்களின் முன்பதிவு பெட்டிகளில், குறைந்த தூரம் செல்வோர் பயணம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
குறுகிய தூரம் செல்லும் பயணிகளுக்காக ரயிலின் முன்பதிவு பெட்டிகளை 'டி- ரிசர்வ்டு' (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி ரயிலின் இரு முன்பதிவு பெட்டிகள் அக்டோபர் 19 முதல் டி- ரிசர்வ்டு பெட்டிகளாகவும், கொல்லத்தில் இருந்து எழும்பூர் வரும் அனந்தபுரி ரயிலின் இரு பெட்டிகள் டி-ரிசர்வ்டு பெட்டிகளாகவும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், தஞ்சையில் இருந்து கும்பகோணம் வழியாக எழும்பூர், ராமேஸ்வரம் செல்லும் ரயிலின் முன்பதிவு பெட்டிகளும், மானாமதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே இரு மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களின் முன்பதிவு பெட்டிகளும் அக்டோர்பர் 24ம் தேதியில் இருந்து டிரிசர்வ்டு பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.
தூத்துக்குடியில் இருந்து மைசூர் மற்றும் மதுரை செல்லும் ரயில்களும் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்பட உள்ளன. டிரிசர்வ்டு பெட்டிகளில் பயணிக்க புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறித்துள்ளது.
இந்தப் புதிய அறிவிப்பு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கு எந்த மாதிரியான கட்டணங்கள் விதிக்கப்படும் என்பது குறித்தும் பயணிகளிடம் கேள்வியெழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”