க.சண்முகவடிவேல்
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிஎல்.ஏ கிருஷ்ணா இன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பேசிய இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறுகையில்,
சமீபகாலமாக தமிழகத்தில் சாதிய மோதல்கள், தலித்துகளை இழிவுபடுத்துதல் போன்ற சம்பவங்கள் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. தமிழக முதல்வர் அமைத்துள்ள ஆணையம் செயலற்று உள்ளது. அந்த ஆணையத்திற்கு குறைந்தபட்சம் அலுவலகமும் இல்லை. ஊழியர்களும் இல்லை. பெயர் அளவுக்கு மட்டுமே அந்த ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
சுய அதிகாரமும் இல்லை. கடந்த ஓராண்டுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தை செயல்படுத்த தமிழக முதல்வர் தீவிர கவனம் செலுத்த வேண்டும். வன்கொடுமைகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் 7 ஜாதியினரை எஸ்டி பட்டியலில் சேர்த்துள்ளது. நரிக்குறவர், குருவிக்காரர், குறவர் உள்ளிட்ட சமூகத்தினரை இந்த பட்டியலில் சேர்த்து உள்ளது.
தமிழகத்தில் இந்த கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. தற்போது இதை நிறைவேற்றியிருப்பது வரவேற்கத்தக்கது. 2003 ஆம் ஆண்டே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனால் எஸ்.டி. பட்டியலில் நரிக்குறவர், குறவர், குருவிக்காரர் ஆகியோரை சேர்த்ததற்கு திமுக அரசு காரணம் இல்லை.
இதைத்தொடர்ந்து மலைவாழ் மக்களுக்கான இட ஒதுக்கீட்டை ஒரு சதவீதம் முதல் 2 சதவீதம் வரை அதிகரிக்க வேண்டும். அதேபோல் நரிக்குறவர், குருவிக்காரர், குறவர் சமூகத்தினருக்கு இடையே பெயர் வேறுபாடு உள்ளது. யார் யார் நரிக்குறவர், குருவிக்காரர், குறவர் என்ற இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர வரலாற்றாளர்கள் ,மானுடயாளர்கள் ஆகியோரைக் கொண்டு இந்த குழப்பத்திற்கு தீர்வு காண வேண்டும்.
அரசு பணியிடங்களில் பிரிவு ஒன்று முதல் நான்கு வரை உள்ள பின்னடைவை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இந்து மனு தர்மத்தில் உள்ள கருத்துக்களை தான் தெரிவித்துள்ளார். அவர் கூறியதில் எந்த தவறும் இல்லை. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய அவசியம் என்ன? குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் 30 கோடி ரூபாய் இதற்கு செலவாகும். ஆகையால் இதன் அவசியத்தை முதலில் குறிப்பிட வேண்டும் என கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பின் போது மாநில இணை பொதுச் செயலாளர் மங்கா பிள்ளை, மாநில பொருளாளர் கௌரிசங்கர், மூத்த நிர்வாகிகள் அன்பு வேந்தன், திருச்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தஞ்சை மாவட்ட தலைவர் கௌதமன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“