திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள கேர் கல்வி நிறுவன விழாவில் சிறப்பு விருந்தினராக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கலந்துகொண்டார்.
அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “நிலவில் விவசாயம் செய்ய முடியும்” என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், ““தற்போது போட்டிகள் நிறைந்த உலகமாக உள்ளது.
மேற்படிப்பு என்பதை தாண்டி, வேலைக்கு செல்வதற்கு கூட போட்டித் தேர்வுகள் என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே, அதற்கு தேவையான பயிற்சிகளையும், முன்னெடுப்புகளையும் செய்தால்தான், இந்திய அளவில் நம் தமிழக மாணவர்கள் முன்னேற முடியும்.
கடந்த, 1969ஆம் ஆம் ஆண்டு நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் கால் பதித்தது உண்மை. இதன்மூலம், நிலவுக்கு, விண்வெளிக்கு மனிதர்கள் சென்று வர முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது.
தற்போதைய நவீன தொழில்நுட்ப காலத்தில் விண்வெளியில் பல மாதங்கள் தங்கி இருப்பதை பார்க்கலாம். அதுபோல, நிலவிலும் குடியேறும் காலம் விரைவில் வரும்.
நிலவில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மிக முக்கியமான கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தற்காலிகமாக செயல்படும் விண்வெளி மையத்தை நிலவில் நிரந்தரமாக அமைக்க முடியும். மனிதர்கள் அங்கேயே குடியேறி, விவசாயமும் செய்ய முடியும்” எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கேர் பயிற்சிப் பள்ளியைச் சார்ந்த முத்தமிழ் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர் க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“