மத்தியில் சிறுபான்மையினருக்காக தனி அமைச்சகம் உருவாக்கிய வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தக்காரர் டாக்டர் மன்மோகன் சிங் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது;
இந்திய ஜனநாயகத்தை உலகம் போற்றும் வகையில் பத்தாண்டு காலம் ஆட்சி நிர்வாகம் நடத்திக் காட்டிய முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் 26-12-2024 இரவு தனது 92வது வயதில் மரணமுற்றார். பிறந்தவர் அனைவரும் மரணத்திற்குச் சரணம் ஆக வேண்டியவர்களே. ஆனால் வாழும் காலத்தில் வாழ்வோருக்குச் செய்யவேண்டிய நற்காரியங்களைச் செய்து காட்டியவர்களே மக்களின் மனங்களில் வாழ்கிறார்கள். அதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்ந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்.
அமைதியின் வடிவம்; ஆழமான சிந்தனையாளர்; பொருளாதார நிபுணர்; இந்தியாவின் பொருளாதாரத்தை உலகில் பொருளாதார வீழ்ச்சி பற்றிய கவலை நிலவிய காலத்தில் மக்கள் போற்றும்படியான பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டிய மேதை அவர். பழகுவதற்கு இனியவர்; பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் நல்லது செய்து வாழ்ந்தவர். சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் இந்திய பிரதமர் என்னும் வரலாறு படைத்தவர் இவரே.
இந்தியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் இன்றைக்கு மணிப்பூர் ஒரு கொலைக்களமாகக் கொதித்துக் கொண்டிருக்கிறது. டாக்டர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது கிழக்கிந்திய மாநிலங்கள் சமூக நல்லிணக்கத்துடன் வளர்ச்சிப் பாதையில் பயணித்து வந்த வரலாறு என்றும் நினைவில் நிற்கக்கூடியதாகும். அப்பகுதியில் இருந்துதான் மன்மோகன் சிங் மாநிலங்களவைக்குத் தொடர்ந்து தேர்வு பெற்று வந்தார் என்பது போற்றற்குரிய சரித்திரம் ஆகும்.
இவரின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில்தான் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 27 பேர் ஒன்றுகூடி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையில் பிரதமரிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் நாட்டில் சிறுபான்மையினருக்குரிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. முதல் அமைச்சராக அப்துர் ரஹ்மான் அந்துலே பொறுப்பு வகித்தார். இதனைச் செய்த வரலாற்றுப் பெருமை டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்கு உரியதாகும்.
நல்லவர் மறைந்து விட்டார்! மறைந்த மாமேதையின் மறுவாழ்வுக்குப் பிரார்த்திப்போம். அவரின் இழப்பால் வருந்தும் அவர்தம் குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்போம் இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.