/indian-express-tamil/media/media_files/2025/08/16/strongman-kannan-2025-08-16-11-15-14.jpg)
7 டன் பஸ்... தரையில் அமர்ந்தபடி 30 மீட்டர் இழுத்த இரும்பு மனிதர்: வீடியோ
கோவையில் தனியார் தொழில்நுட்பக்கல்லூரி ஒன்றில் 7 டன் எடையுள்ள பேருந்தை தரையில் அமர்ந்தபடியே 30 மீட்டர் தூரம் இழுத்து கண்ணன் என்பவர் சாதனை படைத்தார். இந்தச் செயல் அங்கிருந்த கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது.
7 டன் பஸ்... தரையில் அமர்ந்தபடி 30 மீட்டர் இழுத்த இரும்பு மனிதர்: வீடியோ#Coimbatorepic.twitter.com/vYyXd191x4
— Indian Express Tamil (@IeTamil) August 16, 2025
79-வது சுதந்திர தின விழா மற்றும் ஸ்போர்ட்ஸ் அகாடமி திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கண்ணன், தனது உடல் வலிமையை நிரூபிக்கும் வகையில் இந்த சவாலான செயலை நிகழ்த்திக் காட்டினார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், இதற்கு முன்பு பல அசாத்தியமான சாதனைகளைப் படைத்துள்ளார்.
நாகர்கோவிலில் 9.5 டன் எடையுள்ள லாரியை கயிறு கொண்டு இழுத்துள்ளார். மேலும், 370 கிலோ எடையுள்ள காரைத் தூக்கியும், சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் தென் ஆப்பிரிக்க வீரரின் சவாலை ஏற்று 85 கிலோ குண்டை கையால் தூக்கியும் அனைவரையும் திகைக்க வைத்துள்ளார். சர்வதேச ஸ்ட்ராங்மேன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று, 'இந்தியாவின் இரும்பு மனிதர்' என்ற பட்டத்தையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கண்ணன், “தமிழகத்தில் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவரும் இளைஞர்களை விளையாட்டு மூலம் மீட்டெடுக்க முடியும். நான் முதல் முறையாக பேருந்தை தரையில் அமர்ந்தபடி இழுத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அனுபவம் எனக்கு மேலும் பல சாதனைகள் புரிய ஊக்கமளிக்கிறது,” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “பண்டைய தமிழர்கள் உடல் வலிமையில் சிறந்து விளங்கினர். இன்றுள்ள இளைஞர்களும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட்டு, உடல் வலிமை பெற வேண்டும். இளவட்ட கல் தூக்குதல் போன்ற பாரம்பரியப் பயிற்சிகள் உடல் வலிமையை அதிகரிப்பதோடு, ஆயுளையும் கூட்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு இளவட்ட கல் போட்டிகளை நடத்தி இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்,” என்றும் வலியுறுத்தினார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.