திருச்சியிலிருந்து மும்பைக்கு புதிய விமான சேவையை அறிவித்துள்ளது இண்டிகோ ஏர் விமான நிறுவனம்.
மும்பையில் பிற்பகல் 1.10 மணிக்குப் புறப்படும் இண்டிகோ விமானம் பிற்பகல் 2.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடையும். அதேபோல் மறு மார்க்கத்தில், திருச்சியிலிருந்து பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.40 மணிக்கு மும்பை சென்றடையும்.
திருச்சி விமான நிலையத்திலிருந்து மும்பைக்கு விமான சேவை வேண்டும் என்ற திருச்சி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இதன்மூலம் நிறைவேறியுள்ளது. இதேபோல், திருச்சியிலிருந்து சென்னை செல்லும் விமானப் பயணிகளின் வசதிக்காக மேலும் ஒரு விமான சேவையை இண்டிகோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதன் மூலம் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் விமானங்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு நான்கிலிருந்து ஐந்தாக உயரும். வரும் அக்டோபர் 29ஆம் தேதிமுதல் கூடுதல் சேவை அமலுக்கு வரும் என இண்டிகோ ஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. கோவிட் பெருந்தொற்றுக்கு முன்பு திருச்சியிலிருந்து பிற நகரங்களுக்கு இயக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை வாரத்திற்கு 56 ஆக இருந்தது.
இது பெருந்தொற்றுக் காலத்தில் 48 ஆகக் குறைந்தது. இயல்புநிலை திரும்பிய பின்னர் விமான சேவைகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து தற்போது வாரத்திற்கு 63 முறை திருச்சியிலிருந்து பிற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
திருச்சி-ஹைதராபாத் வழித்தடத்தில் இயக்கப்பட்ட 78 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் ரக விமானம் 186 இருக்கைகள் கொண்ட ஏர்பஸ் 320 ஏ ஆக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“