IndiGo Airlines: வரும் அக்டோபர் 27-ம் தேதி முதல் ஹைதராபாத் - திருச்சி இடையே விமான சேவைகளை தொடங்க தனியார் விமான சேவை நிறுவமனாக இண்டிகோ ஏர்லைன்ஸ் முடிவு செய்துள்ளது. இதனால் திருச்சியில் உள்நாட்டு விமான இணைப்பு மேம்பட உள்ளது.
இண்டிகோ ஏர்லைன்ஸ், பெங்களூருக்கு செல்லும் விமானங்களின் கால அட்டவணையை மாற்றியமைத்ததும், சிங்கப்பூருக்கு செல்லும் விமானங்களை நிறுத்தியதும் அதிருப்தியை ஏற்படுத்தின. இந்நிலையில், இந்நிறுவனத்தின் ஹைதராபாத் - திருச்சி விமான சேவை பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அக்டோபர் 27 முதல் தொடங்கும் இந்த புதிய விமான சேவைக்கான முன்பதிவுகளை தற்போது ஆரம்பித்துள்ளது இண்டிகோ. 74 இருக்கைகள் கொண்ட ஏடிஆர் விமானம் இது. ஹைதராபாத் - திருச்சி இடையேயான பயண நேரம், சுமார் இரண்டு மணி நேரம் 25 நிமிடங்கள். விமானத்தின் இணையதளத்தில் கிடைக்கும் அட்டவணையின்படி, விமானம் (6E7116) ஹைதராபாத்தில் இருந்து இரவு 9.05 மணிக்கு புறப்படும். இரவு 11.30 மணிக்கு அது திருச்சியை வந்தடையும். திரும்பிச் செல்கையில், விமானம் (6E7117) திருச்சியிலிருந்து இரவு 11.50 மணிக்கு புறப்படும். (மறுநாள்) அதிகாலை 2.10 மணிக்கு ஹைதராபாத்தை அடையும்.
நீண்ட கணக்கெடுப்புக்குப் பிறகு இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தில் இருந்து பல வெளிநாட்டு இடங்களுக்கு செல்பவர்களுக்கும், அங்குள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைஞர்களுக்கும் இந்த விமானம் பெரும் உதவியாக இருக்கும்.
”ஹைதராபாத்தில் இருந்து, குறிப்பாக அமெரிக்காவிற்கு நிறைய எண்ணிக்கையிலான சர்வதேச விமானங்கள் உள்ளன. திருச்சியிலிருந்து ஹைதராபாத்துக்கு விமான சேவையை இண்டிகோ தொடங்குவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். இது தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தெற்கு மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும் மக்களுக்கு உதவியாக இருக்கும்” என இந்திய பயண முகவர்கள் சங்க தென் தமிழகத்தின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.பரமசிவம் கூறியுள்ளார்.