நாட்டிலேயே முதன்முறையாக, தொழிற்சாலைகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் நகரம் என்ற பெருமையை நமது சிங்கார சென்னை பெற உள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு வரும் கழிவுநீரை சுத்திகரித்து, அதனை சென்னையில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு வழங்க, சென்னை மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது. சென்னையில் நிலவிவரும் தண்ணீர் தட்டுப்பாடு / பற்றாக்குறையை தவிர்க்கும் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.
கொடுங்கையூரில் கட்டப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, ஆகஸ்ட் முதல்வாரத்தில் இருந்து செயல்பட உள்ளது. இந்த ஆலையின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு கிடைக்கும் கழிவுநீர், தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், இதுவரை அந்த தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்த குடிநீர் பாதுகாக்கப்படுவதோடு, அது அப்பகுதி மக்களுக்கு வழங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் பயன்பாடு எவ்வாறு சாத்தியம்
கழிவுநீர் ஒவ்வொருமுறையும் இரண்டுமுறை சுத்திகரிக்கப்படுகிறது. பின்னர் அந்த நீர், ஆறுகளில் திறந்துவிடப்படுகிறது. இனி இரண்டுமுறை சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், புதிதாக அமைக்கப்பட உள்ள கொடுங்கையூர் மற்றும் கோயம்பேடு ஆலைகளில் மீண்டும் சுத்திகரிக்கப்பட்டு தொழிற்சாலைகளின் பயன்பாட்டிற்கு வழங்கப்பட உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, மணலி, மீஞ்சூர், வடசென்னை உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் தொழிற்சாலைகளுக்கு தினமும் 40 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இதன்காரணமாக, அப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகளவில் இருந்துவந்தது.
கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, முதற்கட்டமாக நாளொன்றுக்கு 15 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்க உள்ளது. பின் தினமும் 35 மில்லியன் லிட்டர்களாக அதிகரிக்கப்பட்டு பின் இலக்கான தினசரி 50 மில்லியன் லிட்டர் தண்ணீரை சுத்திகரிக்கும் அளவிற்கு தரமுயர்த்தப்படும்.
இந்த கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை முழுமையான அளவில் நடைமுறைக்கு வந்துவிட்டால், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், மாதவரம், மணலி, சிந்தாதிரிப்பேட்டை, புரசைவாக்கம், தியாகராய நிர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளின் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை முடிவுக்கு வரும்.
செம்பரம்பாக்கம் ஏரி, தற்போது முழுவதும் வறண்டு காணப்படுகிறது. அதன் அருகில் உள்ள குவாரிகளளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு அருகிலுள்ள தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு மட்டும் தினமும் 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. மீஞ்சூரில் செயல்பட்டு வரும் சுத்திகரிப்பு ஆலையின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், மணலி பகுதியில் உள்ள 27 தொழிற்சாலைகளில் 6 தொழிற்சாலைகளுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்தது. தற்போது 20 சதவீத கழிவுநீரே சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. கொடுங்கையூர் மற்றும் கோயம்பேடு ஆலைகள் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், அதாவது ஜூலை 2020ம் ஆண்டிற்குள் தினமும் 90 மில்லியன் லிட்டர் முதல் 120 மில்லியன் லிட்டர் கழிவுநீ்ர் சுத்திகரிக்கப்பட முடியும்.
கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை, இன்னும் சில தினங்களில் பணிகளை துவங்க உள்ள நிலையில், கோயம்பேட்டில் அமைக்கப்பட்டு வரும் ஆலை, செப்டம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், வருங்காலத்தில் சென்னையில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை இருக்காது என்று நம்பலாம்.....