Bethel Nagar Eviction : சமீபத்தில் அனைத்து தரப்பு மக்களிடையும் கடுமையான எதிர்ப்பையும், கேள்வியையும் உண்டாக்கியது தான் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருக்கும் பெத்தேல் நகர் குடியிருப்பில் உள்ள மக்களை வெளியேற்றும் பணி. ”ஆக்கிரமிப்பு” என்று அரசு தரப்பு கூற, ஆக்கிரமிப்பு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு இந்திய அரசின் அனைத்து விதமான முகவரி சான்றுகளையும் கொடுத்து, மின்சார, குடிநீர் இணைப்பையும் கொடுத்தது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் மற்றொரு தரப்பினர்.

வெள்ளத்தால் பாதிக்கும் அபாயம்?
இன்று மழை பெய்யும் போது பெரும்பாலான இடங்கள் சென்னையில் நீரில் மூழ்க காரணம் என்ன தெரியுமா? இங்கே ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகள் மழை காலத்தின் போது பரவி விரியும் தன்மை கொண்டவை. மழைக்காலங்களில் விரியும் ஆறு, பின்னர் நீர் வடிந்த பிறகு தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பும். இன்று நீர் விரியும் “பரவல்” பகுதிகளே இல்லை. அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிட்டது. வெள்ள நீர் தன்னுடைய போக்கில் செல்ல வழி தேடுகிறது. அதன் வழியில் இன்று அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள், பெரிய பெரிய குடியிருப்புகளின் நடுவே புகுந்து சென்று இறுதியில் கடலில் கலக்கின்றது.
பள்ளி, கல்லூரி படிப்பு, வேலை, வாழ்க்கை, வீடு எதிர்காலம் என்று அனைத்தையும் இந்த பகுதியில் விதைத்தவர்களை அங்கே இருந்து வெளியேற்றக் கூறுவது என்பது மிகவும் கடினமானது தான். இன்று இவர்கள் வெளியேறுவதால் அடையும் மனக்கசப்பு, அங்கேயே தங்கி சந்திக்க இருக்கும் பேராபத்தைக் காட்டிலும் குறைவானது தான். தாங்கிக் கொள்ள கூடியது தான் என்று கூறுகிறார், பெயர் கூற விரும்பாத, இயற்கை ஆர்வலர்.
காலநிலை மாற்றத்தால் சென்னை மோசமான விளைவுகளை சந்திக்கும்! எச்சரிக்கும் IPCC அறிக்கை
வழக்கு கடந்து வந்த பாதை
மேய்க்கால் புறம்போக்கு, கழவெளி பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் பெத்தேல் நகர். இம்மக்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தின் படி அந்த பகுதியில் சுமார் 3500 குடும்பங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர்.
பெத்தேல் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகள் அனைத்தும் நீர் நிலை பகுதியில் கட்டப்பட்டுள்ளதாக மேற்கோள்காட்டி, ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2015ம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என்று கூறி ஐ.எச். சேகர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் அங்குள்ள கட்டிடங்களை அகற்ற உத்தரவு பிறப்பித்தது.
தமிழக அரசு அதிகாரிகள் இந்த பகுதிகளில் மின் இணைப்பை துண்டித்து கட்டிடங்களை அகற்றும் பணிகளை மேற்கொண்ட போது பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை நத்தம் புறம்போக்கு நிலமாக வகை மாற்றம் செய்து 2010ம் ஆண்டு காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி உத்தரவு பிறப்பித்தார் என்று கூறி நிராகரிக்கப்பட்ட பட்டாக்களை மீண்டும் வழங்க வேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் நிலத்தை வகைமாற்றம் செய்ய பரிந்துரை மட்டுமே வழங்க இயலும். இறுதி முடிவை நில நிர்வாக ஆணையர் தான் எடுப்பார். எனவே மாவட்ட ஆட்சியரின் உத்தரவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தான் அரசு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே அரசின் நடவடிக்கைகளில் எந்த விதமான தவறும் இல்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். வணிக கட்டிடங்களை முதலில் அகற்றுவதற்கும், இதர கட்டிடங்களை பிறகு அகற்றுவதற்கும் 3 மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை வனத்துறையினர் கைப்பற்றி அதன் இயற்கை சூழலை மீட்டெடுத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெத்தேல் நகர் ஆக்கிரமிப்பு வழக்கு: காலநீட்டிப்பை கோரும் தமிழக அரசு
பொதுமக்களின் கருத்து
இருபது முப்பது ஆண்டுகளாக இதே பகுதியில் வசித்து வரும் மக்களை, இப்பகுதி சதுப்புநிலம் எனவே இங்கிருந்து அனைவரும் தங்களின் வீடுகளை காலி செய்துவிட்டு செல்ல வேண்டும் என்று கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடன் வாங்கி வீடு கட்டியிருப்பவர்களின் நிலை என்ன? இது தொடர்பாக அங்கே வசிக்கும் மக்களிடம் பேசியது இந்தியன் எக்ஸ்பிரஸ்.
அரசு வேறு இடங்களுக்கு எங்களை மாற்றாமல், இதே பகுதியில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் குடியிருப்பு ஒன்றை ஏற்படுத்தி தர இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த பகுதியில் அனைத்தும் கழுவெளி மற்றும் மேய்க்கால் புறம்போக்கு என்று இருக்கும் பட்சத்தில் ஏன் இந்த வீடுகளை இடித்துவிட்டு, இதே பகுதியில் வேறு இடங்களில் வீடுகளை கட்டித் தர வேண்டும். அப்போது இயற்கை சூழல் பாதிக்கப்படாதா என்றும் கேள்வி எழுப்புகின்றனர் இப்பகுதி மக்கள்.
வருகின்ற மார்ச் 16ம் தேதி அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருக்கின்ற நிலையில், பெண்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் பெயரில் இங்குள்ள நிலத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று மனித சங்கிலி போராட்டம் ஒன்றை இன்று மாலை நடத்த திட்டமிட்டுள்ளனர் பெத்தேல் நகர் மக்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil