கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது மகள்களை பார்க்க அனுமதி மறுக்கப்படுவதாக பேராசிரியர் காமராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது ஈஷா மையம் தொடர்பான பல்வேறு விவகாரங்கள், வழக்குகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து ஈஷா யோகா மையத்தின் மீது உள்ள வழக்குகள் உட்பட அனைத்து விவகாரங்கள் குறித்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து கோவை மாவட்ட எஸ்.பி. கார்த்திகேயன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் அம்பிகா மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக ஈஷா மையத்தில் ஆய்வு மேற்கொண்டனர். 6 குழுக்களாக பிரிந்து இந்த விசாரணையானது நடத்தப்பட்டது. முதல் நாளான செவ்வாய்கிழமை 9 மணி நேரம் விசாரணை நடந்த நிலையில் நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாக விசாரணையானது நடைபெற்றது.
ஈஷா யோகா மையத்தில் உள்ள அறைகளில் போலீசார் சோதனையிட்டனர். வெளிநாட்டில் இருந்து வந்து தங்கி இருக்கும் நபர்களிடம் விசா உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக இருக்கிறதா? என்பது குறித்த விசாரணையும் நடத்தப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/8ZPKRIHhONLjYDhrkUtq.jpeg)
ஈஷா பள்ளி வளாகத்தில் தங்கி படிக்கும் குழந்தைகளிடம், குழந்தைகள் நல அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஈஷா மையத்தில் தங்கி இருக்கும் துறவறம் பெற்றுள்ள பெண்களிடம் சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ கேமராவிலும் பெண்களின் பதில் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் ஈஷா யோகா மையத்தில் நடந்த இரண்டாவது நாள் சோதனை நிறைவடைந்தது. விசாரணைக்கு பின் ஈஷா யோகா மையத்தில் இருந்து வெளியில் வந்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது விசாரணை முழுமையாக முடிவடைந்தது. விசாரணை குறித்த விவரங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என தெரிவித்தார்.
நேற்று நடந்த இரண்டாவது நாள் சோதனையில் கூடுதலாக சுகாதார துறையினர், மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மனநல ஆலோசகர் உள்ளிட்டோர் விசாரணையில் ஈடுபடுத்தபட்டு இருந்தனர் எனத் தெரிவித்தார். ஈஷா மையத்தில் தங்கியுள்ள வெளிநாட்டவர் குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும், நான்காம் தேதி நீதிமன்றத்தில் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
ஈஷா மையத்தின் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் அனைத்தையும் எடுத்து இருக்கிறோம். அதில் ஒரு சில முக்கியமான வழக்குகளும் இருக்கிறது என தெரிவித்தார். இதே போல ஈஷா யோக மையம் கொடுத்திருக்கக்கூடிய புகார்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் எனவும் எஸ்.பி. கார்த்திகேயன்தெரிவித்தார். இதனையடுத்து ஈஷா யோகா மையத்தில் இருந்த அரசு துறை வாகனங்கள் ஆய்வை முடித்து வளாகத்தில் இருந்து வெளியேறின.
செய்தி: பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“