Advertisment

ஈஷா மையத்தில் இன்றும் விசாரணை தொடரும்: கோவை எஸ்.பி கார்த்திகேயன்

ஈஷா யோகா மையத்தில் இன்றும் விசாரணை தொடரும் என கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Isha sp

கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள ஈஷா யோகா மையத்தில் தங்கி உள்ள தனது இரு மகள்களை மீட்டுத் தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையில், ஈஷா மீதான வழக்குகள், வழக்குகளின் விவரம், மகள்கள் கட்டாயத்தின் பேரில் யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர் என காமராஜ் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.

Advertisment

WhatsApp Image 2024-10-02 at 10.19.24

இது தொடர்பாக விசாரணை நடத்தி 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.  இதையடுத்து, ஈஷா யோகா மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துறையினர், மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நல குழுவினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாக நேற்று விசாரணை மேற்கொண்டனர். ஈஷா யோகா மையத்தில் தங்கி உள்ள துறவிகள், தன்னார்வலர்கள், பணியாளர்கள், அலுவலர்கள், பள்ளியில் என அனைத்து வகைகளிலும் பல்வேறு கோணங்களில் குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.

துறவிகள் மட்டுமின்றி ஈஷாவில் இருக்கும் அனைவரிடமும் போலீசார் விசாரணையை மேற்கொண்டு உள்ளனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6 குழுக்களாக பிரிந்து 70க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன் விசாரணை நடைபெற்று வருகிறது. 

முக்கியமான இந்த விசாரணைக்கு காரணமான வழக்கு தாக்கல் செய்த காமராஜின் இரு மகள்களான லதா, கீதா மட்டுமின்றி  பெண் துறவிகள் , பெண் தன்னார்வலர்களிடம் பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங், ஈஷா யோகா மையத்தில் உள்ள பெண் துறைவிகளிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டு உள்ளார்.

WhatsApp Image 2024-10-02 at 10.19.22

இது தவிர குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., பேரூர் டி.எஸ்.பி., ஆலந்துறை, பேரூர், தொண்டாமுத்தூர், காருண்யா நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள், காவல் துறையினர் என 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன் விசாரணை நடைபெற்றது.  ஒவ்வொருவரிடமும் சுய விவரங்கள், சுய விருப்பத்தின் பேரில் தங்கி உள்ளனரா? அவரவர் அடையாள அட்டைகளின் உண்மை தன்மை என தனித் தனியாக விசாரணையானது எழுத்து பூர்வமாக மட்டுமின்றி காணொளி மூலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

WhatsApp Image 2024-10-02 at 10.19.24 (1)

12க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த காவல்துறையினர், அதிகாரிகள் நேற்று காலை 10.30 மணிக்கு துவங்கி இரவு 7.30 மணி வரை என 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.  
விசாரணை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இன்றும் விசாரணை தொடரும் எனவும்,  அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஈஷா யோகா மையத்தில் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும்,  காவல் துறையுடன், மாவட்ட சமூக நலத்துறை , குழந்தை நல குழு ஆகியோரும் விசாரணையில் ஈடுபட்டதாகவும் விசாரணைக்கு ஈஷா முழு ஓத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும், துறவிகள் உள்ளிட்ட அனைவர் இடத்திலும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும் கூறினார். 

மேலும், 4ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் விசாரணை விவரங்களை தெரிவிக்க இயலாது என்றும் கூறினார்.

நேற்றைய தினம் 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெறும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

cbe sp

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோக மையம் தொடர்பாக நடைப்பெற்று வரும் வழக்கில் மனுதாரரால் எழுப்பபட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை.  ஈஷா யோக மையம் எவரையும் திருமணமோ அல்லது துறவறமோ மேற்கொள்ள வற்புறுத்துவதில்லை என்று ஈஷா மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஈஷா யோக மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈஷா அறக்கட்டளை சத்குரு அவர்களால் யோகா மற்றும் ஆன்மீகத்தை மக்களுக்கு வழங்குவதற்காக நிறுவப்பட்டது. இந்திய அரசியலமைப்பு சட்டம் ஒவ்வொரு தனிமனிதனும் குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அவரவர் வாழ்க்கை பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தையும், ஞானத்தையும் வழங்கி உள்ளது. ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை. ஏனெனில் இவை அனைத்தும் தனிமனித சுதந்திரம் மற்றும் விருப்பம், இதில் தலையிட எவருக்கும் உரிமையில்லை என உறுதியாக நம்புகிறோம். 

ஈஷா யோகா மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் ஒரு சிலரின் இருப்பிடமாக இருக்கிறது. உண்மை இவ்வாறு இருக்கையில் 2 பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்தும், உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.  

இந்நிலையில் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் தனது மகள்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று கோரி அவர்களின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டு பிரம்மசாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில்தான் ஈஷா யோகா மையத்தில் தங்கியுள்ளோம் என்று தெளிவுபடுத்தியுள்ளனர். அது மட்டுமில்லாமல் மிக சமீபத்தில் காமராஜ் ஈஷா யோக மையம் சென்று தன்னுடைய மகள்களை சந்தித்த CCTV காட்சிகளும் ஆதாரங்களாக  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டு உள்ளது. 

மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தேவையான அனைத்து ஆதாரங்களையும் வழங்கி உள்ளதால் உறுதியாக உண்மை வெல்லும் என்று நம்புகிறோம். மேலும் இதுவரை போலியாக உருவாக்கப்பட்ட  அனைத்து தேவையற்ற சர்ச்சைகளும் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். 

மேலும் 2016-ஆம் ஆண்டு இதே காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தீர விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி கோவை மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று கோவை ஈஷா யோகா மையத்தில் மா மதி மற்றும் மா மாயு ஆகிய இருவரையும் சந்தித்து நீதி விசாரணை நடத்தியது. அவர்களின் அறிக்கையின் படி தீர்ப்பு அளிக்கப்பட்டு அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்பில் நீதிபதிகள் “பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை, பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்களது சுயவிருப்பத்திலேயே தங்கி இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்," என்று கூறியுள்ளார்கள் என்பதை தற்போது நினைவுக் கூற விரும்புகிறோம்.

முன்னதாக, காமராஜ் ஈஷாவிற்கு எதிராக செயல்படும் பிற உதிரி அமைப்புகள் மற்றும் நபர்களுடன் சேர்ந்து, ஈஷா அறக்கட்டளையால் சுற்றுப்புற கிராம மற்றும் பழங்குடியின மக்களின் நன்மைக்காக கட்டப்பட்டு வரும் தகன மேடை குறித்து தொடர் பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் அரசு அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் தான்தோன்றித் தனமாக உண்மை கண்டறியும் குழு என்ற பெயரில் குழுவாக ஈஷா வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்று காவல்துறையால் தடுக்கப்பட்டனர். 

பின்னர் எவ்வித முகாந்திரமும் இன்றி ஈஷா தன்னார்வலர்கள் மீது கிரிமினல் புகாரும் அளித்தனர். இது தொடர்பான வழக்கில் காவல்துறையின் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தவிர, மனுதாரர் பொய்யாக குறிப்பிட்டதை போன்று அறக்கட்டளைக்கு எதிராக வேறு எந்த கிரிமினல் வழக்குகளும் இல்லை. ஆகவே ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்புவதில் ஈடுபடுபவர்கள் மீது  சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளது. 

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment