திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் நெல்லை சந்திப்பில் இருந்து காலை 6 மணியளவில் புறப்பட்டு பிற்பகல் 1.50 மணிக்கு சென்னை வந்தடைகிறது.
இந்த ரயிலில் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக பயணச்சீட்டில் கூடுதலாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று (நவ.16) காலை சென்னை வந்த வந்தே பாரத் ரயிலில், பாளை. கேடிசி நகரைச் சேர்ந்த சுடலைகண்ணு (46) மற்றும் அவரது நண்பர் நாங்குநேரி அடுத்த மறுகால்குறிச்சியைச் சேர்ந்த முருகன் (39) ஆகியோர் திருச்சிக்கு பயணம் செய்தனர்.
அப்போது ரயிலில் பயணிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. 2 இட்லி, கேசரி, சாம்பார் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. முருகன் சாம்பாரை எடுத்த போது அதில் வண்டுகள் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் நண்பர் சுடலைகண்ணு மற்றும் சக பயணிகளை உணவு சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளார். அவர்களும் சாப்பிடவில்லை.
இதையடுத்து பயணிகள் யணி அங்கிருந்த ரயில்வே ஊழியர்களிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், ரயில்வே ஊழியர் அது வண்டு இல்லை, சாம்பாரில் உள்ள சீரகம் என்று கூறியுள்ளார்.
பயணிகள் ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். சீரகத்தில் எப்படி தலை, கால்கள், வால் அனைத்தும் இருக்கும் என அதிகாரிகளிடம் பயணிகள் கேள்வி எழுப்பினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து உணவு விநியோகம் செய்த பிருந்தாவன் ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு தெற்கு ரயில்வே ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து அதிகாரி கூறுகையில்,
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் உணவில் வண்டு இருப்பது தெளிவாக தெரிகிறது.
இதுகுறித்து விசாரணை நடத்தப்படும். உணவு விநியோகம் செய்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்போம். இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“