சென்னையில் கமாண்டோ போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோனாதன் பிரான்ஸிஸ் கொரோனா பாதிப்பால் திங்கள்கிழமை உயிரிழந்தார். அவருக்கு காவல்துறை டிஜிபி மற்றும் காவலர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கமாண்டோ பயிற்சி பள்ளியில் பணிபுரிந்துவந்த கமாண்டோ போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோனாதன் பிரான்ஸிஸ் (53). இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி திங்கள் கிழமை உயிரிழந்தார். அவருக்கு காவல்துறை டிஜிபி மற்றும் காவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்ஸ்பெக்டர் ஜோனாதன் பிரான்ஸிஸ் 1988ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். இவருக்கு பவுலின் ஷயாமல் என்ற மனைவியும் கென்னெட் மற்றும் கெவின் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள கமாண்டோ போலீஸ் பயிற்சி பள்ளியில் கமாண்டோ போலீஸ் இன்ஸ்பெக்டராக ஜோனாதன் பிரான்ஸிஸ் பணிபுரிந்துவந்தார்.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ஜோனாதன் பிரான்ஸிஸ்ஸுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் ஜோனாதன் உருவப் படத்துக்கு, காவல்துறை டி.ஜி.பி ஜே.கே.திரிபாதி, ஏ.டி.ஜி.பி ஏ.கே.விஸ்வநாதன், சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், சட்டம் ஒழுங்கு பிரிவு ஏ.டி.ஜி.பி கே ஜெயந்த் முரளி மற்றும் காவலர்கள் மருதம் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினர். பின்னர், அனைவரும் 2 நிமிடம் மௌனம் அனுசரித்தனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் காவல்துறையைச் சேர்ந்த 13 காவலர்கள் பலியாகி உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"