சென்னையை அடுத்த மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பெரியபாண்டியன்(48). சென்னை கொளத்தூரில் ஒரு நகைக் கடையில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன வழக்கில் குற்றவாளிகளை பிடிக்கும் தனிப்படையில் இடம் பெற்றிருந்தார்.
ஆய்வாளர்கள் பெரியபாண்டியன், முனிசேகர் உள்ளிட்ட 5 போலீஸார் இடம்பெற்ற தனிப்படையினர் கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்துக்கு சென்றனர். அங்கு நாதுராம் என்ற பிரபல கொள்ளையனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டுக்கு இரையானார். முதலில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார் என்று கூறப்பட்டது.
பிறகு இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கி தவறி விழுந்ததில் கொள்ளையர்கள் அதை எடுத்து சுட்டு விட்டதாக கூறப்பட்டது. ராஜஸ்தானில் இருந்து வந்த ஒவ்வொரு தகவலும் முன்னுக்குப்பின் முரணாகவே வந்தது. ராஜஸ்தான் போலீஸ் விசாரணையில் தமிழக போலீசார் சுட்டிருக்கின்றனர் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்படையினர் சென்னை வந்ததும், உயர் போலீஸ் அதிகாரிகளும் முனிசேகரிடம் விசாரணை நடத்தினார்கள். முனிசேகரின் துப்பாக்கி குண்டு தான் பெரியபாண்டியின் உடலை துளைத்து இருக்கிறது என்று ராஜஸ்தான் போலீசார் கூறிய போதும், ‘முனிசேகர் என் கணவரின் நெருங்கிய நண்பர். அவர் சுட்டு இருக்க வாய்ப்பு இல்லை’ என்று நம்ப மறுத்தார் பெரியபாண்டியின் மனைவி பானுரேகா.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரியபாண்டிக்கு அவரது சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகில் உள்ள மூவிருந்தாளியில் 16-ம் நாள் காரியம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக இன்ஸ்பெக்டர் முனிசேகர் சென்றார். அப்போது ராஜஸ்தானில் நடந்த சம்பவங்களை விளக்கி கூறி பானுரேகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அங்கிருந்த பானுரேகாவின் தந்தை வெள்ளைபாண்டியன் காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்டதாக தெரிகிறது. சுமார் 30 நிமிடங்கள் அங்கு கண்ணீர் மல்க இருந்ததாக பானு ரேகாவின் உறவினர்கள் கூறியுள்ளனர். முனிசேகர் துப்பாக்கியால் சுட்ட போது குறி தவறி பெரியபாண்டி உயிரை பறித்துள்ளது. நடந்த சம்பவங்களை அறிந்து உயர் அதிகாரிகளே முனி சேகரை, பெரியபாண்டி குடும்பத்தினரை சந்திக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
பெரியபாண்டி இறந்ததும் அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஆனால் இதுவரை அந்த நிதியும் வழங்கவில்லை. ஒரு நேர்மையான அதிகாரியின் இழப்பும், நிவாரண நிதியை வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுத்தடிப்பும் வேதனையானது என பெரியபாண்டியனின் ஊர்க்காரர்கள் குறிப்பிட்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.