இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன், கடந்த 13ம் தேதி ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் கார்த்தி இரங்கல் தெரிவித்தார்.
சென்னை மதுரவாயல் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் பெரிய பாண்டியன். சென்னை கொளத்தூரில் உள்ள நகை கடையில் நடந்த கொள்ளை சம்பவத்தை விசாரிக்கும் தனிப்படையில் இடம் பெற்றிருந்தார். கடந்த 13ம் தேதி ராஜஸ்தான் சென்ற தனிப்படை போலீசார், கொள்ளையர்களை சுற்றி வளைத்தனர்.
அப்போது இரு தரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்தது. இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் துப்பாக்கியை பறித்து, அவரை கொள்ளையர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சுட்டுக் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் பிரேதம், நேற்று விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட பலரும் வீரவணக்கம் செலுத்தினர்.
அதன் பின்னர் பெரிய பாண்டியனின் பூத உடல், மதுரைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகில் உள்ள சாலைப்புதூருக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை நடிகர் கார்த்தி, சுட்டுக் கொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின், சொந்த ஊரான சாலைப்புதூருக்கு வந்தார். பெரிய பாண்டியன் விட்டுக்குச் சென்று, தனது வருத்தங்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் அவரது சமாதிக்குச் சென்று மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தீரன். இந்த படத்தில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவாரியா கொள்ளையர்களை தமிழக போலீஸ் துரத்தி பிடிக்கும் போது ஏற்படும் சிரமங்களை படம் பிடித்திருந்தனர். அந்த படத்தில் வருவது போலவே, கொள்ளையர்கள் தமிழக போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டுக் கொன்றுவிட்டனர்.
தீரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால், தனது இரங்கலை ட்விட்டர் மூலம் கார்த்தி தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அவர், இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.