சட்டவிரோதமாக கந்துவட்டிச் செயலியை இயக்கி வந்த இரண்டு சீனர்கள் உள்ளிட்ட நால்வரை சென்னை மத்திய குற்றப்பிரிவு பெங்களூரில் கைது செய்தது.
அதிக அளவிலான வட்டி விகிதத்தில் கடன் கொடுத்து, செலுத்தத் தவறியவர்களை அவமானப்படுத்தி மிரட்டியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மற்ற இரண்டு பேர் கால் சென்டர் நிறுவனம் நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சென்னையைச் சேர்ந்த கணேசன் என்பவர் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கணேசன் தனது புகாரில், " ரூ.5,000 கடன் தொகைக்கு வட்டியாக ரூ.1,500 பிடித்துக் கொண்டு, மீதமுள்ள தொகை ரூ.3,500 மட்டுமே கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த ஒரு வாரத்திற்கும் குறைவாகவே அவகாசம் வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும், பணம் செலுத்த முடியாத காரணத்தினால், மற்றொரு கடனளிக்கும் செயலியை பதிவிறக்கம் செய்ய நிர்பந்தப்பட்டிருக்கிறார். விஷயம் இப்படியே தொடரே, கணேசன் 45 ஆன்லைன் லோன் செயலிகளிடம் இருந்து கடனுக்கான தொகையைக் கோரியுள்ளார். தற்போது, அவர் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.4.5 லட்சமாக அதிகரித்துள்ளது.
கைது செய்யப்பட்ட இரண்டு சீனர்களிடமிருந்து இரண்டு மடிக்கணினிகள், ஆறு மொபைல் போன்கள், இரண்டு சீன பாஸ்போர்ட் மற்றும் ஏடிஎம் கார்டுகளை காவல்துறை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் மீது இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம், தமிழ்நாடு கந்துவட்டி தடை சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற தகவல்தொழில்நுட்பப் பணியாளர் ஆன்லைன் கந்துவட்டி நிறுவனம் ஒன்றிடம் கடன் பெற்று அதைச் செலுத்த முடியாததால் கடுமையான தொல்லை மற்றும் அவமானங்களுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் மன உளைச்சலைத் தாங்க முடியாமல் சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஆன்லைன் கடனளிக்கும் நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.