கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சில முக்கிய சிகிச்சை பிரிவுகளில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் உள்நோயாளிகள் வெளிநோயாளிகள் என 7500-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், ஈரோடு, நீலகிரி போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் வந்து செல்கின்றனர்.
இப்படி 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பல நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இருப்பினும் சில சிகிச்சை பிரிவுகளில் மருத்துவர்கள் நோயாளிகளை சந்தித்து சிகிச்சை கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகிறது. குறிப்பாக சில வார்டுகளில் இரவு நேரங்களில் அவசர சிகிச்சையில் மட்டுமே மருத்துவர்கள் இருக்கும் நிலையில் இதர பிற முக்கிய வார்டுகளில் ஒரு உதவி மருத்துவர்கள் கூட இருப்பது இல்லை.
மருத்துவர்கள் நோயாளியை சந்திப்பது இல்லை
குறிப்பாக மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் இரவு நேரங்களில் அவசரத்திற்கு ஒரு மருத்துவர் கூட இல்லாத சூழலும் அதே போல செவிலியர்கள் இரண்டு பேர் இருந்தும் இரும்பு கேட்டால் ஆன அறைக்குள் அவர்கள் இருப்பதால் நோயாளிகளின் உறவினர்கள் உதவிக்கு கூட செவிலியர்களை அழைக்க முடியாத சூழலும் உள்ளது. இப்படி கடந்த 16-ம் தேதி சின்னியம்பாளையத்தில் இருந்து விபத்தில் சிக்கி தலையில் படுக்காயங்களுடன் வந்த முதியவரை மூளைய நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் சிகிச்சைக்கு அனுமதித்தும், போதிய சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் தெரிவிக்கின்றனர். அதேபோல 16-ம் தேதி இரவு அந்த வயது முதிர்ந்த நோயாளிக்கு மூளையில் ரத்தக் கசிவு இருந்ததால் இரவெல்லாம் காது, மூக்கு, வாயில் ரத்தம் வந்தபடி ரத்த வாந்தி எடுத்தும் அவசர உதவிக்கு கூட மருத்துவர் இல்லாமல் பெரும் சிரமம் அடைந்துள்ளனர். அதேபோல 17-ம் தேதி இரவும் ஒரு மருத்துவரும் வார்டில் இல்லாததால் பெரும் சிரமம் அடைந்ததாக வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், அந்த நோயாளிக்கு இரண்டு முறை சி.டி ஸ்கேன், இ.சி.ஜி , ரத்தப் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்கள் தாங்களாக வந்து உரிய சிகிச்சை அளிக்கவில்லை. அதிகாரிகளின் கவனத்திற்கு செல்லும் பொழுது அவர்கள் அழைத்துச் சொல்லும்பொழுது மருந்து செலுத்துகின்றனர். மாத்திரை தருகின்றனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனைக்குள் உள் நோயாளியாக இருக்கும் அவரை நேற்று செவிலியர்கள் டிஸ்சார்ஜ் செய்ய வலியுறுத்தியுள்ளனர். இன்னும் நோயாளி தனது பாதிப்பிலிருந்து வெளிவராத நிலையில் டிஸ்சார்ஜ் செய்ய சொல்வது தொடர்பாக நோயாளியின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டிஸ்சார்ஜை ரத்து செய்தனர் பின்னர் சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
இரவு நேரங்களில் மூளை நரம்பு போன்ற அதி முக்கியமான பிரிவுகளில் மருத்துவர்கள் இல்லை என்பது நோயாளிகளின் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ள சூழலில் விரைவில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு இரவு நேரத்தில் மருத்துவர்கள் முக்கிய துறைகளில் பணிபுரிகிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை ஆக இருந்தாலும் நூற்றில் 25 சதவீதம் தொகையாவது வாங்கிவிட்டு உரிய நேரத்தில் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முன்னதாக, நோயாளியின் உறவினர் மருத்துவமனையின் இத்தகைய குறைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ட்விட்டர் பதிவிட்டு பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை