விழுப்புரம் மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடிக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசார் நள்ளிரவில் காதலர்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சங்கராபுரத்தில் இருந்து விழுப்புரத்துக்கு அழைத்து வந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள அருகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அபிதா என்ற சாதி இந்துப் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வேறு சாதியினர் என்பதால் அவர்களுடைய பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், பெற்றோர்களின் எதிர்ப்பை செல்வகுமாரும் அபிதாவும் வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.
இதையடுத்து, அபிதாவின் தந்தை சங்கராபுரம் காவல் நிலையத்தில் தனது மகள் காணவில்லை என்று புகார் அளித்தார். இதனிடையே, காதலர்கள் இருவரும் வியாழக்கிழமை காவல் நிலையத்திற்கு வந்தனர். அவர்களுடைய பெற்றோர்கள் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்துக்கு வந்த அபிதா மற்றும் செல்வகுமாரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்த சம்வம் குறித்து போலீசார் கூறுகையில், சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதலர்கள் விவகாரத்தில் இருவரின் உறவினர்களும் காவல் நிலையத்தில் திரண்டது குறித்து கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ஜியாஉல் ஹக்கிற்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணனுக்கு தொடர்புகொண்டு காதலர்களை பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்து பேசினார். இதையடுத்து, காதலர்கள் அபிதா - செல்வர்குமார் இருவரையும் நள்ளிரவில் போலீசார் சங்கராபுரம் காவல் நிலையத்தில் இருந்து ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கு கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து, காதலர்கள் இருவரையும் பெங்களூருவில் உள்ள செல்வகுமாரின் நன்பருடைய வீட்டுக்கு சிறிது காலம் தங்கி இருப்பதற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர் என்று தெரிவித்தனர்.
சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதலர்களுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், போலீசார் காதல் ஜோடியை நள்ளிரவில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சங்கராபுரத்தில் இருந்து விழுப்புரம் அழைத்து வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"