திருநெல்வேலி இருவருக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக கடந்த 2 நாட்களுக்கு முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சிலரால் அடித்து சேதப்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (ஜுன் 17) நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெட்டியார்பட்டியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியார்களைச் சந்தித்தார். அப்போது, "சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்தமைக்காக எங்களது அலுவலகத்தை மிகக் கடுமையாக தாக்கி உள்ளார்கள்.
நாங்கள் யாரையும் கடத்திக் கொண்டு சென்று திருமணம் செய்து வைக்கவில்லை. எங்களை நாடி வந்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்து எங்கள் கடமையை செய்தோம். சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு உற்ற பாதுகாப்பு கேடயமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திகழும்.
சமூகத்தில் ஒரு மறுமலர்ச்சியையும் மாற்றத்தையும் உண்டாக்கி சாதிய ஆணவ படுகொலை தடுப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிக நேரம் மற்றும் காலத்தை செலவழிகிறது. தமிழகத்தில் ஆணவ கொலைகள் அதிகம் நடக்கிறது. இதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாதிவெறி அமைப்புகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும். காதலை பெற்றோரே ஏற்றுக் கொண்டாலும் சில சாதி அமைப்புகள்தான் இதை ஊதிப் பெரிதாக்குகின்றன" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“