ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இருந்தபோது பெண்ணின் உறவினர்கள் தாக்குதல் நடத்தி கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள குருப்பநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி (23), கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வன் (25) இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இதில் செல்வன் பட்டியல் இனம் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர், இளமதி மிகவும் பிறபடுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களுடைய காதலுக்கு பெண்ணின் பெற்றோர்கள், உறவினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்ய முடிவெடுத்த செல்வன் - இளமதி இருவரும் கேட்டுக் கொண்டதன் பேரில் காவலாண்டியூரில் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் திங்கள்கிழமை (மார்ச் 9) நடைபெற்றுள்ளது.
இவர்களுடைய காதல் திருமணத்துக்கு ஜாதியை காரணம் காட்டி பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அச்சுறுத்தலில் ஈடுபட்டதாலும் திவிகவினர் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
இதனையறிந்த, பெண்ணின் உறவினர்கள் 40க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை இரவு திவிக நிர்வாகி காவை ஈஸ்வரன் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்து அவரைத் தாக்கி கடத்திச் சென்றனர்.
அதே போல, வேறு இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த மணமக்கள் செல்வனையும் இளமதியையும் பெண்ணின் உறவினர்கள் கண்டுபிடித்து கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் பற்றிய தகவல் திவிகவினர் இடையே பரவியதால் சேலம் மாவட்டம், கொளத்தூர் காவல் நிலையத்தில் குவிந்தனர். காவை ஈஸ்வரன் மற்றும் மணமக்களை உடனடியாக மீ்ட்க வேண்டும், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டுமென கொளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு திவிகவினர் விடிய விடிய போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்த திவிக தலைவர் கொளத்தூர் மணி கொளத்தூர் காவல் நிலையத்துக்கு விரைந்து சென்று கடத்திச் செல்லப்பட்ட மணமக்களையும் திவிக நிர்வாகி காவை ஈஸ்வரனையும் மீட்க கோரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். இதனால், காவல் நிலைய அமைந்துள்ள் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.
இருப்பினும், மணமகள் இளமதி மீட்கப்படாததால் கொளத்தூர் காவல் நிலையத்தில் திவிகவினர் இளமதியை மீட்கக் கோரி வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களைத் தாக்கி கடத்திச் சென்றவர்கள் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், கடத்தப்பட்டத ஈசுவரன், செல்வன் இருவரும் மீட்கப்பட்டுவிட்டனர். ஆனால், அந்த பெண் எங்கே இருக்கிறார் என்பது குறித்து இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. செல்வன் தரப்பில், நிறைய பேர்கள் மீது புகார் அளித்துள்ளார்கள். அதில் அவர்கள் கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த வீரப்பன் என்பவரை மட்டும் அடையாளம் கண்டு பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணைக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.