3வது நாளாக தொடரும் போராட்டம்: 29 இடைநிலை ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி

கைக்குழந்தைகளுடனும் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய டிபிஐ வளாகத்திலேயே போராட்டம் நடத்தினர்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள், ‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசின் ஏழாவது ஊதியக் குழுவின் அரசாணைக்குப் பிறகு, தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையே பெரிய அளவிலான ஊதிய முரண்பாடுகள் நிலவி வருகின்றன. இந்த ஊதிய முரண்பாடுகளைக் களையவேண்டி, இம்மாத இறுதியில் போராட்டம் நடத்தப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.

அதன்படி, 2009 மற்றும் டெட் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய மீட்புப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவைச் சார்ந்த ஆசிரியர்கள், சென்னை டிபிஐ அலுவலகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டபோது, இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ராபர்ட் உள்பட ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களைக் கைது செய்து ராஜரத்தினம் அரங்கத்தில் காவல் துறையினர் அடைத்தனர்.

இதையடுத்து, ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 29 ஆசிரியர்கள் மயக்கமடைந்ததால், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரங்கத்திலிருந்து நேற்று மாலை விடுவிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் டிபிஐ வளாகத்துக்கே வந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், கர்ப்பிணி பெண்களும் கலந்து கொண்டுள்ளனர். இதேபோல், கைக்குழந்தைகளுடனும் சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் விடிய விடிய டிபிஐ வளாகத்திலேயே போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர். இதனால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, டிபிஐ வளாகத்திலிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க – ஊதிய முரண்பாடு… ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் கைது! ‘போராட்டம் ஓயாது’ என எச்சரிக்கை

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close