சர்வதேச மகளிர் தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பான விபரம் வருமாறு:-
ஸ்டாலின் வாழ்த்து வீடியோ
தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். அதன்படி, சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் 'பிங்க் ஆட்டோ' திட்டத்தை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் 'உலக மகளிர் தின விழா' நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை முதல் புதுமைப்பெண் திட்டம் வரை தமிழக அரசின் பெண்களுக்கான நலத்திட்டங்களைப் பட்டியலிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் தின வாழ்த்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அந்த வீடியோவில் பேசியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "வணக்கம். நலமா? மாதந்தோறும் 1 கோடியே 16 லட்சம் சகோதரிகள் ரூ.1000 உரிமைத் தொகை பெறுகிறார்கள். தாய்வீட்டு சீர் மாதிரி எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் மாதாந்திர சீர் என்று எந்நேரமும் தமிழ் சகோதரிகள் மனம்மகிழ சொல்றாங்க. அது தான் விடியலின் ஆட்சி.
ஆட்சிப் பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்துக்கு தான். இந்த விடியல் பயணமானது. மகளிரின் சேமிப்பை அதிகரித்துள்ளது. அரசுப் பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரிக்குச் செல்ல முடியாத நிலையை மாற்றி உயர்கல்வியைப் பயில உருவாக்கப்பட்ட திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம். தமிழ்நாடு மாணவ, மாணவிகள் என்னை அப்பா, அப்பா என்று வாய் நிறைய அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் பாச உணர்வுதான் முக்கியம். அன்புச் சகோதரிகள் அனைவருக்கும் உலக மகளிர்தின வாழ்த்துகள்" என்று அதில் அவர் கூறியுள்ளார்.
மோடி வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். "மகளிர் தினத்தன்று நமது பெண் சக்திக்கு தலை வணங்குகிறோம். எங்கள் அரசு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுள்ளது என்பது திட்டங்களில் பிரதிபலிக்கிறது. பல்வேறு துறைகளில் முத்திரை பதிக்கும் பெண்களால் எனது சமூக ஊடக கணக்குகள் இன்று கையாளப்படும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக எங்கள் அரசு பாடுபட்டுள்ளது" என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
"தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் சர்வதேச மகளிர்தின நல்வாழ்த்துகள். தமிழ்நாடு பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. அன்பு சகோதரிகளே உங்களுக்காக, உங்கள் பாதுகாப்புக்காக என்றைக்கும் அ.தி.மு.க போராடும்." என்று சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் வாழ்த்து
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "அம்மா, அக்கா, தோழி, தங்கை என அனைவருக்கும் என் வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் இணைந்து தேர்ந்தெடுத்த திமுக நம்மை ஏமாற்றிவிட்டது, வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வை அகற்றுவோம். மகளிர் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய தி.மு.க-வை நாம் அனைவரும் இணைந்து வெளியேற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.
கனிமொழி வாழ்த்து
"உண்மையான சுதந்திரம் என்பது நமக்குச் சொந்தமானவற்றிற்காக போராட வேண்டிய அவசியமில்லாத போது தான். வாழ்நாள் முழுவதும், நாம் கட்டளையிடப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ளோம். நாம் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறோம், ஆனால் குற்றம் சாட்டப்படுகிறோம்.
நம்மை உயர்த்துவது போல் நடிக்கிறார்கள் - அவர்கள் நம்மை சமமாகப் பார்க்கும் தைரியம் ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. நமது இருப்பு ஒரு விவாதமாக இல்லாத, நமது மதிப்பு விதிவிலக்குகளில்
அளவிடப்படாத ஒரு உலகம் நமக்குத் தேவை" என்று தி.மு.க எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சீமான் வாழ்த்து
" பெண்களைப் போற்றுவோம், பெருமைமிக்க நாடாக மாற்றுவோம். பாலினச்சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளை பெற்றுத்தரவும் நாதக சமரசமின்றி சமர் செய்யும். ஒவ்வொரு நாளும் மகளிர் நாள் தான் என மனதில் கொள்வோம், உலக மகளிர் அனைவருக்கும் மகளிர் நாள் நல்வாழ்த்துகள்” என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.