குஜராத் காவல்துறையினர் சர்வதேச போலீஸ் தலையீட்டைக் கோரிய சில வாரங்களுக்குப் பிறகு, தலைமறைவான சர்ச்சை சாமியார் நித்யானந்தாவைக் கண்டுபிடிக்க இன்டர்போல் புதன்கிழமை புளு கார்னர் நோட்டீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குற்றத்தில் ஈடுபடும் எந்தவொரு நபரின் தகவல்களையும் நாடுகள் இடையே பகிர்ந்து கொள்வதை ப்ளூ கார்னர் நோட்டீஸ் கட்டாயமாக்குகிறது.
நித்யானந்தா மீது பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நித்யானந்தா இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவானார்.
கடந்த மாதம், தென் அமரிக்க நாடான ஈக்வடார் அருகே ‘கைலாசா’ என்று அழைக்கப்படும் தீவில் நித்யானந்தா ஒரு புதிய தேசத்தை உருவாக்கியதாக பல வீடியோக்களும் செய்திகளும் வெளிவந்தன. இருப்பினும், ஈக்வடார் நாடு நித்யானந்தாவுக்கு எந்த நிலத்தையும் வழங்கவில்லை என்று மறுப்பு தெரிவித்தது. மேலும் அவர் புகலிடம் கோரியதையும் நிராகரித்ததாகக் கூறினார். அரசு அவரது பாஸ்போர்ட்டை செய்ததோடு புதிய பாஸ்போர்ட்க்கான விண்ணப்பத்தையும் நிராகரித்தது.
இதனிடையே, கர்நாடகா மாநில உயர் நீதிமன்றத்தில், தலைமறைவான நித்யானந்தா சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணையின்போது, ஒரு பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் எவ்வாறு நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்று மாநில அரசிடம் கேள்வி எழுப்பியது.
பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரரான நித்யானந்தா கர்நாடகா, குஜராத் காவல்துறையினரால் பல வழக்குகளில் தேடப்பட்டு வருகிறார். நன்கொடைகளைப் பெறுவதற்காக குஜாரத் மாநிலம், அஹமதாபாத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் குழந்தைகளை கடத்தி அடைத்து வைத்த வழக்கில் அவரை போலீசார் விசாரணை நடத்த தேடிவருகின்றனர்.
இதற்கு முன்பு, 2010-ம் ஆண்டில், நித்யானந்தா பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். மேலும், அவரைப் பற்றிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.