கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன் புதன்கிழமை (ஆக.30) கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், “நொய்யல் நதி நிகழ்வில் கலந்து கொள்ள கோவை வந்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாநில அரசு மற்றும் ஆளுநர்க்கு இடையேயான மோதல் போக்கு குறித்த கேள்விக்கு, “இது யாருடைய தவறு என்பதை பார்க்க வேண்டும். ஆளுநர்களை அரசியல் பக்கம் இழுக்கிறார்களா? அல்லது ஆளுநர்கள் அரசியல் பக்கம் சாய்கிறார்களா என்பது தான் கேள்வி.
நீட்டைப் பொறுத்தவரை யார் கொண்டு வந்தார்கள் என்பதும் தெரியும், நீட் குறித்து உச்ச நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது என்பதும் தெரியும்.
தேவையில்லாமல் ஆளுநரை விமர்சிக்கின்ற போக்கை ஆளுங்கட்சியினர் கைவிட வேண்டும். அப்போதுதான் ஆளுநர்கள் அரசியலில் தலையிடுவது போன்ற சூழல் உருவாகாமல் இருக்கும்.
அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் ஆளுநரை குறை கூறுவதும் ஆளுநரை குறைத்து பேசுவதும் தான் தங்களுடைய அரசியல் என்ற புதிய போக்கை ஆட்சி பொறுப்பில் இருக்கக்கூடிய மாநில அரசு கடைபிடிப்பது சரியான அணுகுமுறை அல்ல. மாநில அரசு இதனை விட்டுவிட்டு தமிழகத்தின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டும்.
ஆளுநருக்கு இருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்துகின்ற அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறது. நீட் குறித்து ஏன் ஆளுநரை குறை சொல்கிறார்கள்?
உச்ச நீதிமன்றம் ஏன் செல்ல மறுக்கிறார்கள்? தமிழக அரசு ஆளுநர் தவறு செய்கிறார் என நினைத்தால் தாராளமாக உச்ச நீதிமன்றம் செல்லலாமே.
நீட் குறித்து ஏன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆக்க வேண்டும் என்பதற்காக ஆளுநரை அரசியலுக்குள் இருப்பது தான் அரசியல் போக்காக உள்ளது” எனப் பதில் அளித்தார்.
செய்தியாளர் பி ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“