மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியை போலீசார் கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரித்த சிபிசிஐடி போலீசார், விசாரணைக்கு பின் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் தலைமையில் குழு அமைத்து கவர்னர் உத்தரவிட்டிருந்தார். அவரும் மதுரை, விருதுநகரில் முதல்கட்ட விசாரணை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள், மாணவிகளிடம் விசாரணை நடத்திய அவர் , நேற்று தனது 2வது கட்ட விசாரணையை துவக்கினார்.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிர்மலா தேவியிடம், சந்தானம் குழுவினர் இன்று விசாரணை நடத்தினர். சந்தானம் மற்றும் 2 பேராசிரியைகள் அவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் ஐந்து மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. விசாரணையின் போது, நிர்மலா தேவி முழு ஒத்துழைப்பு அளித்ததாக அதிகாரி சந்தானம் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, நிர்மலா தேவியுடனான முதற்கட்ட விசாரணை நிறைவு பெற்றதாக சந்தானம் கூறியுள்ளார்.
இதனிடையே, நிர்மலா தேவி விவகாரத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கு 4 நாள் சிபிசிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கைதான உதவி பேராசிரியர் முருகனை சஸ்பெண்ட் செய்ய மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் திட்டமிட்டுள்ளார்.